செய்திகள்

சிறுமி வயிற்றில் உள்ள கருவை உடனே கலைக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-09-07 08:29 GMT   |   Update On 2018-09-07 08:29 GMT
மைனர் பெண்ணின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க உத்தரவிட்ட ஐகோர்ட்டு நீதிபதிகள், வருகிற 11-ந்தேதி கரு கலைத்தது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். #MadrasHighCourt
சென்னை:

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய மகள் 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார். பிளஸ்-2 படித்துள்ளார். பள்ளியில் படிக்கும்போது, அவர் தினமும் ஆட்டோவில் சென்று வந்தார். அந்த ஆட்டோவை ஓட்டிய டிரைவர் சந்தோஷ்குமார், ஏற்கனவே திருமணமானவர். ஆனால், தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி, என் மகளை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார்.

இதை நம்பி, அவருடன் கடந்த மே மாதம் என் மகள் சென்று விட்டார். இதுகுறித்து போலீசில் புகார் செய்தேன். போலீசார் என் மகளை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியபோது, அவர் கர்ப்பமாகி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து சந்தோஷ் குமார் கைது செய்யப்பட்டார். என்னுடைய மகள் தற்போது காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளார். என் மகளுக்கு இன்னும் 17 வயது கூட ஆகவில்லை. அதனால், மைனர் பெண்ணான என் மகளது வயிற்றில் உள்ள கருவை கலைக்க வேண்டும் என்று குழந்தைகள் நல கமிட்டி, மாவட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்.

என் மகளை, இந்த ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தி, என்னிடம் ஒப்படைக்க திருப்பூர் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.நிர்மல்குமார் ஆகியோர், சிறுமியின் கருவை கலைப்பது குறித்து பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி டீனுக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல், சிறுமியின் உடல் நலம் குறித்து அறிக்கையை தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ். சிலம்புச்செல்வன் ஆஜராகி வாதிட்டார்.

மருத்துவ அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், சிறுமியின் வயிற்றில் உள்ள கருவை இன்றே கலைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழு உடனே மேற்கொள்ள வேண்டும். அதன்பின்னர் வருகிற 11-ந்தேதி கரு கலைத்தது தொடர்பான அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். #MadrasHighCourt

Tags:    

Similar News