செய்திகள்
போடிமெட்டு மலைச்சாலையில் பாறைகள் உருண்டு கிடக்கும் காட்சி.

போடி மெட்டு மலைச்சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டு மண் சரிவு

Published On 2021-11-24 03:57 GMT   |   Update On 2021-11-24 03:57 GMT
போடி மெட்டு மலைச்சாலையில் கனமழை காரணமாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டு மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலச்சொக்கநாதபுரம்:

தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் முக்கிய சாலையாக போடி மெட்டு மலைச்சாலை உள்ளது. போடி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சி, இரட்டை வாய்க்கால் பெரியாறு ஆகிய பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

கொட்டக்குடி, குரங்கணி, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்த நிலையில் மாலையில் இடைவிடாமல் கொட்டித்தீர்த்தது. இதனால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டு சாலையின் குறுக்கே விழுந்து மண் சரிவு ஏற்பட்டது.

ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வாகனங்கள் இயக்க அனுமதி அளித்திருந்த நிலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற வாகனங்கள், தோட்டத்தொழிலாளர்களின் ஜீப்புகள் ஆகியவை போடி முந்தல் சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டன. இதே போல கேரளாவில் இருந்து வந்த வாகனங்களும் போடி மெட்டு சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டன. பின்னர் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இரவோடு இரவாக பொக்லைன் எந்திரங்களை கொண்டு வந்து மண் சரிவு, பாறை சரிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் விட்டு விட்டு மழை பெய்து வருவதாலும் பல்வேறு இடங்களில் இன்னும் பாறைகள் அகற்றும் பணி நிறைவடையாததாலும் மறு உத்தரவு வரும் வரை இந்த சாலையில் எந்த வாகனங்களும் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

போடியில் இருந்து மூணாறு உள்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மேலும் நேற்று பணிக்கு சென்ற தொழிலாளர்களும் வீடு திரும்ப முடியாமல் சோதனைச்சாவடியிலேயே இரவு வரை காத்திருந்தனர்.

தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை முழு வீச்சில் விரைந்து முடிக்க பணியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

Similar News