செய்திகள்
திருத்துவபுரம் அரசு பள்ளியில் தடுப்பூசி போட குவிந்திருந்த பொதுமக்கள்.

கோவேக்சின் தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்

Published On 2021-07-30 05:42 GMT   |   Update On 2021-07-30 05:42 GMT
நாகர்கோவில் சால்வேசன் ஆர்மி பள்ளியில் கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசியை போடுவதற்கு பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்து நின்றனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று வரை 4,14,382 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 88,022 பேர் 2-ம் டோஸ் தடுப்பூசி என மொத்தம் 5,02,404 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதில் 52,945 பேர் கோவேக்சின் தடுப்பூசியை செலுத்தி உள்ளனர். கோவேக்சின் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தி கொண்டவர்கள் 28 நாட்களுக் கு பிறகு 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும். தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 2-வது டோஸ் போட முடியாமல் தவித்து வந்தனர்.

3 வாரத்திற்கு பிற கு நேற்று கோவேக்சின் தடுப்பூசிகள் குமரி மாவட்டத்திற்கு வந்தது. இதை இன்று பொதுமக்களுக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

நாகர்கோவில் சால்வேசன் ஆர்மி பள்ளியில் கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசியை போடுவதற்கு பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்து நின்றனர். திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி போடுவதற்கு காலை 5 மணிக்கே பொதுமக்கள் வந்தனர்.

நீண்ட வரிசையில் 1,500-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு டோக்கன் வழங்கப்பட்டது. 400 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் டோக்கன் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பளுகல் அரசு மேல்நிலைப் பள்ளி, பெத்தலேகபுரம் பள்ளி, சுண்டப்பற்றி விளை அரசு மேல்நிலைப்பள்ளி, இரவிபுதூர் மேல்நிலைப் பள்ளி, செண்பகராமன் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஏற்றக் கோடு மேல்நிலைப்பள்ளி, பத்மநாபபுரம் அரசு தொடக்கப் பள்ளியிலும் கோவேக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டது.

கோவேக்சின் தடுப்பூசி மையங்களில் கூட்டம் அலைமோதியது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. கோவேக்சின் தடுப்பூசி குறைவான அளவே வந்து கொண்டிருப்பதால் 2-வது டோஸ் மட்டுமே போடப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News