ஆன்மிகம்
சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.

திருச்செந்தூர் கந்தசஷ்டி: சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2020-11-18 05:07 GMT   |   Update On 2020-11-18 05:07 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா 3-ம் திருநாளில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து உச்சிகால தீபாராதனையும் நடந்தது.

தொடர்ந்து யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார்.

அங்கு மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு மஞ்சள் பொடி, மா பொடி, திரவிய பொடி, இளநீர், தேன், பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரமாகி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வந்து யாகசாலையை சேர்ந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் வளாகம், பிரகாரங்களில் பக்தர்கள் விரதம் இருக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் அவர்களது வீடுகளில் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். சாமி தரிசனத்திற்கு மட்டும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News