செய்திகள்
சிபிஐ, டி.கே.சிவக்குமார்,

டி.கே.சிவக்குமார் வீட்டில் சோதனை நடத்தியது ஏன்?: சி.பி.ஐ. அதிகாரிகள் விளக்கம்

Published On 2020-10-06 02:30 GMT   |   Update On 2020-10-06 02:30 GMT
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீட்டில் சோதனை நடத்தியது ஏன்? என்பது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பெங்களூரு :

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீடு, அவரது சகோதரர், நண்பர் வீடு, அலுவலகம் என 14 இடங்களில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர். டி.கே.சிவக்குமார் வீட்டில் அரசியல் காரணங்களுக்காக சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். மேலும் பெங்களூரு ஆர்.ஆர்.நகர், சிரா சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைவர்களின் பலத்தை குறைக்க மத்திய, மாநில பா.ஜனதா அரசுகளால் டி.கே.சிவக்குமார் வீட்டில் சோதனை நடந்துள்ளதாகவும் தலைவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், டி.கே.சிவக்குமார் வீட்டில் சோதனை நடத்தியதற்கான காரணம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக முன்னாள் மந்திரியும், தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் டி.கே.சிவக்குமார் வருமானத்திற்கு அதிகமாக ரூ.74 கோடியே 93 லட்சத்திற்கு சட்டவிரோதமாக சொத்து குவித்து இருப்பது பற்றிய ஆதாரங்கள் சி.பி.ஐ.க்கு கிடைத்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததால் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் அனுமதி பெற்று சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. டி.கே.சிவக்குமாரின் வீடு உள்பட 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது ரூ.57 லட்சம், சொத்து குவிப்பு ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், சில ஆவணங்கள், வங்கி கணக்குகளின் விவரங்கள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவை சிக்கி உள்ளது. அதனை கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Tags:    

Similar News