ஆன்மிகம்
துர்க்கை

கிரக தோஷம் போக்கும் துர்க்கை ஆலயங்கள்

Published On 2020-11-13 03:10 GMT   |   Update On 2020-11-13 03:10 GMT
ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரிக்கு இந்தியாவில் பல இடங்களில் கோவில்கள் அமைந்துள்ளன. சில இடங்களில் தனியாகக் கோவில் கொண்டும் அமர்ந்துள்ளாள்.
ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரிக்கு இந்தியாவில் பல இடங்களில் கோவில்கள் அமைந்துள்ளன. ஸ்ரீதுர்க்கை பல இடங்களில் காளியாகவும், சண்டிகையாகவும், மகிஷாசுர மர்த்தினியாகவும் காட்சி தருகிறார். எல்லா சிவாலயங்களிலும் துர்க்கைக்கென்று தனி சன்னதி இருக்கம். சில இடங்களில் தனியாகக் கோவில் கொண்டும் அமர்ந்துள்ளாள்.

* மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் கதிராமங்கலம் என்ற சிற்றூரில் மிகப்பிரபலமான வனதுர்கா பரமேஸ்வரியாக காட்சி தருகிறாள். கம்பர் வழிபட்ட துர்க்கை இவள். மிருகண்ட முனிவரின் மகனாய் பிறந்த மார்கண்டேயருக்கு சிரஞ்சீவியாக வாழும் வழியைக் காட்டியவர். இதே வழித்தடத்தில் பாஸ்கர ராஜபுரம் என்ற இடத்தில் `விஷ்ணு துர்க்கைக்கு' தனிக்கோவில் உண்டு. இவளை வணங்குவோர் வாழ்வில் என்றும் அமைதியும் சாந்தியும் நிலவும்.

* கும்பகோணத்திற்கு அருகில் பட்டீஸ்வரம் என்ற இடத்தில் வீற்றிருக்கும் துர்க்கா பரமேஸ்வரி சோழ மன்னர்களுக்கு குலதெய்வமாக விளங்கியவள். கேட்டவர்களுக்கு கேட்ட வரங்களை கொடுக்கும் தாயுள்ளம் கொண்டவள் இந்த துர்க்கை.

* நெல்லை மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரியில் தாமிரபரணி நதிக்கரையில் துர்க்கை அம்மன் கோவில் கொண்டுள்ளாள். ஒரு காலத்தில் பல்லவர்களின் தலைநகராக விளங்கிய சேந்தமங்கலத்தில் (விழுப்புரத்திற்கு அருகில்) துர்க்கைக்கென்று ஒரு கோவில் உள்ளது.

* திருத்தணி - திருப்பதி வழித்தடத்தில் பொன்பாடி ரெயில் நிலையத்திற்கு அருகில் மாத்தூரில் `மகிஷாசுரமர்த்தினி' குடி கொண்டுள்ளாள் ரெயில் பாதை அமைக்கத் தோண்டிய இடத்தில் கிடைத்த சிலையை அங்கேயே கோவில் கட்டி மகிஷாசுரமர்த்தினியை வழிபட்டு வருகிறார்கள்.

* கும்பகோணத்திற்கு அருகில் உள்ள அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரி ஆலயம் புகழ் பெற்ற ஒன்றாகும். எல்லா கிரக தோஷத்திற்கும் இங்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. இக்கோவிலில் தனி நவக்கிரக சன்னதி கிடையாது. எல்லா அர்ச்சனைகளும் நவக்கிரக நாயகியான ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரிக்கே செய்யப்படுகிறது.

* சிதம்பரத்திற்கு அருகில் உள்ள சிவபுரிக்கு அருகில் உள்ள திருக்கழிப்பாலை என்ற இடத்தில் உள்ள சிவன் கோவிலில் `சதுராக்னி துர்க்கை' தனிச்சந்நதியுடன் காட்சி தருகிறாள்.

* நெல்லை தாழைïத்துப் பாதையில் கங்கை கொண்டானுக்கு அருகில் உள்ள பாராஞ்சேரியில் `சயன துர்க்கை' படுத்தவாறு காட்சி தருகிறார். வேறெங்கும் இத்தகைய வடிவில் துர்க்கையை காண முடியாது.

* தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள புஞ்சை என்ற ஊரில் ஸ்ரீதுர்க்கா தேவி குடி கொண்டுள்ளாள். இதற்கு அருகிலேயே சேத்தமங்கலத்தில் சுயம்புவான துர்க்கையைக் காணலாம்.

* ஸ்ரீராமர் பூஜித்த துர்க்கைக்கு வேதாரண்யத்தில் பெரிய கோவில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த துர்க்கை இவள்.

* வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகில் உள்ள திருவானப் புதூரில் உள்ள துர்க்கையின் பெயரிலேயே இவ்வூர் `துர்க்கை சந்நிதி' என்றே அழைக்கப்படுகிறது. அரியானா மாநிலத்தின் தலைநகர் சண்டீகரில் குன்றின் மீது `சண்டிகை' வீற்றிருக்கிறாள். அவள் பெயரிலேயே இந்நகரம் `சண்டிகர்' என விளங்குகிறது.

* தென்ஆற்காடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் என்ற கிராமத்தில் சாமுண்டீஸ்வரிக்கு தனிக்கோவில் உள்ளது.
Tags:    

Similar News