செய்திகள்
காய்ச்சல் பரிசோதனை

சென்னையில் இன்று முதல் சிறப்பு முகாம்- 200 வார்டுகளிலும் காய்ச்சல் பரிசோதனை

Published On 2021-04-08 06:20 GMT   |   Update On 2021-04-08 06:20 GMT
இன்று தொடங்கப்பட்டுள்ள காய்ச்சல் பரிசோதனைகளை தொடர்ச்சியாக நடத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று பின்னர் படிப்படியாக குறைந்தது. இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதன் பின்னர் இயல்பு நிலை திரும்பியது. மக்கள் வழக்கம் போல பணிகளை தொடங்கினார்கள். முக கவசம் அணியாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கூட்டம் கூட்டமாக பங்கேற்றனர்.

இதன் காரணமாகவே கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, தஞ்சாவூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே நோயின் தாக்கம் அதிகரித்து வந்தது.

குறிப்பாக சென்னையில் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த வாரம் ஆயிரத்தை தொட்ட தினசரி பாதிப்பு நேற்று 1,500-ஐ எட்டி இருக்கிறது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2½ லட்சத்தை தாண்டி உள்ளது.

நேற்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளி விவரப்படி சென்னையில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 880 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 10,685 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகம் முழுவதும் நேற்று 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் 6 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இதையடுத்து சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே நோய் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் தேர்தல் காரணமாக பல்வேறு இடையூறுகள் இருந்து வந்தன.

இந்த நிலையில் தேர்தல் முடிந்து மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் கொரோனா தடுப்பு பணிகளில் முழுமையாக ஈடுபட தொடங்கி உள்ளனர். இதையடுத்து இன்று முதல் சென்னையில் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.


இதன்படி இன்று காலை இந்த பரிசோதனை தொடங்கியது. சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தனர்.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம் 12 ஆயிரம் தற்காலிக பணியாளர்களை நியமித்துள்ளது. இவர்களில் 6 ஆயிரம் பேர் இன்று களம் இறங்கினார்கள்.

புரசைவாக்கம், வேப்பேரி, சூளைமேடு, கொளத்தூர், அண்ணாநகர், முகப்பேர், மாதவரம், ராயப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இன்று வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த காய்ச்சல் பரிசோதனையில் காய்ச்சல், தலைவலியுடன் அவதிப்பட்டவர்களை உடனடியாக மாநகராட்சி பணியாளர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி சிகிச்சை பெற அறிவுறுத்தினார்கள்.

3 நாட்களுக்கு மேல் காய்ச்சலுடன் இருந்தவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து அவர்களை பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர்.

இந்த காய்ச்சல் முகாம்களில் டாக்டர்கள் மற்றும் 4 ஆயிரம் தன்னார்வலர்கள் ஆகியோரும் பங்கேற்றனர். கொரோனா பாதித்த பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தன்னார்வலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வாங்கி கொடுக்கும் பணிகளிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “கொரோனா பரவலை தடுக்க சென்னையில் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதில் முக்கிய நடவடிக்கையாக இன்று முதல் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் ஆகியோருக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

சென்னையில் தற்போது பொதுமக்கள் கொரோனா பரவலைப்பற்றி கவலைப்படாமல் அலட்சியமாகவே உள்ளனர். பலர் முக கவசம் அணிவது இல்லை. கூட்ட நெரிசலையும் கண்டு கொள்வது இல்லை.

இதுபோன்று செயல்படுவதை தவிர்த்து பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இன்று தொடங்கப்பட்டுள்ள காய்ச்சல் பரிசோதனைகளை தொடர்ச்சியாக நடத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News