செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்- தமிழக அரசு உறுதி

Published On 2021-07-08 03:19 GMT   |   Update On 2021-07-08 03:19 GMT
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை, தற்காலிக வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவை ஏற்படுத்த மத்திய அரசின் பரிந்துரைகள் குறித்து முடிவு செய்வதற்கான கூட்டம் வருகிற 16-ந்தேதி நடக்கிறது.
மதுரை:

மதுரை மாவட்டம், அதலை கிராமத்தைச் சேர்ந்த புஷ்பவனம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019-ம் ஆண்டில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைய உள்ள இந்த மருத்துவமனைக்கான 85 சதவீத நிதியை ஜப்பானிய நிறுவனம் வழங்குகிறது.

இதேபோல பிற மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. சில மாநிலங்களில் இந்த மருத்துவமனை பணிகள் முடிந்துவிட்டன. பல மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளில் எம்.பி.பி.எஸ். மருத்துவ மாணவர் சேர்க்கையும், வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவும் தொடங்கப்பட்டு விட்டன.

எனவே மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திட்ட செயலாக்கப்பிரிவை (புராஜக்ட் செல்) உருவாக்கி அதில் மருத்துவமனை இயக்குனர், மருத்துவ கண்காணிப்பாளர், இணை இயக்குனர், நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதன் மூலம் தற்காலிகமாக ஒரு இடத்தில் வெளிநோயாளிகள் பிரிவை ஏற்படுத்தவும், எம்.பி.பி.எஸ். மருத்துவ மாணவர் சேர்க்கையை தொடங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், “மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளோம். வருகிற 9-ந்தேதி அன்று, மத்திய சுகாதாரத்துறை மந்திரியை, தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் சந்திக்கிறார். அப்போது மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் குறித்தும் பேச உள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை, தற்காலிக வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவை ஏற்படுத்த மத்திய அரசின் பரிந்துரைகள் குறித்து முடிவு செய்வதற்கான கூட்டம் வருகிற 16-ந்தேதி நடக்கிறது. அந்த கூட்டத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையை தொடங்குவது மற்றும் தற்காலிக வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவை ஏற்படுத்துவது குறித்து எடுக்கப்படும் முடிவை பதில் மனுவாக இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News