இந்தியா
ரோசய்யா

தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்

Published On 2021-12-04 03:48 GMT   |   Update On 2021-12-04 08:35 GMT
ரோசய்யா 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழக கவர்னராக பணியாற்றி இருந்தார்.
ஐதராபாத்:

தமிழக முன்னாள் கவர்னரும், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்-மந்திரியுமான ரோசய்யா ஐதராபாத்தில் வசித்து வந்தார்.

வயது முதிர்வு காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவரது நாடித்துடிப்பு குறைந்தது.

இதைத்தொடர்ந்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ரோசய்யா அதிகாலை 5.30 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு 88 வயதாகிறது.

ரோசய்யா மறைவு செய்தி கேட்டதும் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், அவரது குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும் அவரது உடலுக்கு தலைவர்கள், நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

ரோசய்யா 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழக கவர்னராக பணியாற்றி இருந்தார்.

அவர் குண்டூர் மாவட்டம் வேம்புரு பகுதியில் 1933-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி பிறந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் 1968, 74, 80 ஆகிய ஆண்டுகளில் எம்.எல்.சி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1989 மற்றும் 2004-ல் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 மார்ச் மாதம் முதல் 1999 ஏப்ரல் வரை எம்.பி.யாக பணிபுரிந்தார்.

ஒருங்கிணைந்த ஆந்திராவில் பல முறை அமைச்சராக இருந்த ரோசய்யா 2009 செப்டம்பர் 3-ந் தேதி முதல் 2010 நவம்பர் வரை முதல்-மந்திரியாக பணியாற்றினார். ராஜசேகர் ரெட்டி மரணமடைந்ததை தொடர்ந்து அவருக்கு முதல்-மந்திரி பொறுப்பு கிடைத்தது.



ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது 2011 ஆகஸ்டு 31-ந் தேதி ரோசய்யா தமிழக கவர்னராக பொறுப்பேற்றார். 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந் தேதி வரை அந்த பதவியில் இருந்தார். 2014 ஜூன் முதல் ஆகஸ்டு வரை அவர் கர்நாடகா மாநிலத்துக்கு பொறுப்பு கவர்னராகவும் பணியாற்றினார்.

ரோசய்யா 1994 முதல் 96 வரை ஒருங்கிணைந்த ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.

தமிழக கவர்னர் பதவி காலம் முடிந்தபிறகு 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். கிட்டத்தட்ட 60 ஆண்டு காலம் அவரது அரசியல் வாழ்க்கை இருந்தது.

மரணமடைந்த ரோசய்யாவுக்கு சிவலட்சுமி என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.


Tags:    

Similar News