செய்திகள்
கைது

போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்ற 3 பேர் கைது

Published On 2021-10-19 02:44 GMT   |   Update On 2021-10-19 02:44 GMT
பிரான்ஸ் நாட்டில் வசிப்பவர் இறந்துவிட்டதாக கூறி போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்ற 3 பேரை திருநள்ளாறு போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்:

காரைக்கால் மாவட்டம் நெடுங்காட்டு பகுதியை சேர்ந்தவர் குமார் ஆனந்த். பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். அவர், பருத்திக்குடி பகுதியில் 4 வேலி நிலம் வாங்கி, தனது உறவினர் குணசேகரன் பராமரிப்பில் விட்டுள்ளார்.

இந்த நிலையில், நாகை மாவட்டம் சிவன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்த தேவராஜ் (73) என்பவர் கடந்த 20.5.2018 அன்று குமார் ஆனந்த் இறந்துவிட்டதாக கூறி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மும்முனி கிராமத்தில், போலியான இறப்பு சான்றிதழ் பெற்றுள்ளார். பின்னர் குமார் ஆனந்த் இறப்பதற்கு முன்னதாக தனக்கு பவர் ஆப் அத்தாரிட்டி கொடுத்துள்ளதாக மற்றொரு போலி ஆவணத்தை தயாரித்துள்ளார்.

இதன்பின் 7.9.2021 அன்று திருநள்ளாறு சார்பதிவாளர் அலுவலகத்தில், செருமா விளங்கை கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் (46) மனைவி விஜயா மற்றும் நெடுங்காடு வடமட்டத்தை சேர்ந்த பாஸ்கரன் (41) ஆகியோருக்கு அந்த நிலத்தை தேவராஜ் விற்றுள்ளார். இந்த பத்திர பதிவிற்கு, காரைக்காலைச் சேர்ந்த செய்யது முகமது முகைதீன் அப்துல் காதர் (45) உடந்தையாக இருந்துள்ளார்.

வெளிநாட்டில் வசிக்கும் குமார் ஆனந்த், இறந்ததாக போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க குணசேகரன் திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட தேவராஜ், பாஸ்கரன், செய்யது முகமது முகைதீன் அப்துல் காதர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இளங்கோவனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News