செய்திகள்
கைது

தாம்பரம் அருகே தொழிலாளி கடத்தி கொலை- 7 பேர் கைது

Published On 2019-11-30 11:38 GMT   |   Update On 2019-11-30 11:38 GMT
தாம்பரம் அருகே புதையலை மறைத்து வைத்ததாக தொழிலாளி கடத்தி கொலை செய்த வழக்கில் 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:

தாம்பரத்தை அடுத்த கிருஷ்ணாநகரில் வசித்தவர் முருகன். கட்டிட தொழிலாளி. இவர் காட்டுப்பகுதியில் மது குடித்தபோது பாம்பு கடித்ததில் இறந்துவிட்டதாக கூறி அவரது உடலை மனைவி, மகன் சொந்த ஊரான வேலூரை அடுத்த செய்யாறு கிராமத்துக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் முருகன் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த கிராமத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முருகனின் மனைவி, மகனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, முருகனை புதையலை மறைத்து வைத்து இருந்ததாக கூறி 10 பேர் கும்பல் அடித்து கொன்றது தெரியவந்தது.

10 நாட்களுக்கு முன்பு முருகன் தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்தார். அப்போது அவரிடம் நிறைய பணம் இருந்தது. பார் ஊழியருக்கு டிப்சாக 2 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.

மேலும் தனது நண்பர் ஒருவருக்கு மது வாங்கி கொடுத்தார். அவரிடம் முருகன் தனக்கு தங்க நகைகள் உள்ள புதையல் கிடைத்ததாகவும், அதை விற்று நிறைய பணம் வைத்து இருப்பதாகவும் கூறினார்.

இதை பாரில் மது குடித்து கொண்டிருந்த கும்பல் ஒன்று கேட்டு கொண்டிருந்தது. புதையல் பற்றி அக்கும்பல் முருகனிடம் கேட்டது. ஆனால் அவர் எந்த தகவலும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இதனால் அவரை கடத்த அந்த கும்பல் முடிவு செய்தது. முருகன் வீட்டுக்கு சென்று அவரது மனைவி, மகனிடம் விசாரித்தபோது அவர் சொந்த ஊரான வேலூருக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து வேலூருக்கு சென்று முருகனை தாம்பரத்துக்கு அழைத்து வந்தனர்.

முருகன், அவரது மனைவி, மகனிடமும் தங்க புதையலை கேட்டு மிரட்டினர். அப்போது முருகனை சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுபற்றி வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என்று முருகனின் மனைவி, மகனை அந்த கும்பல் மிரட்டி விட்டு தப்பியது.

இதனால் பயந்துபோன அவர்கள் முருகன் பாம்பு கடித்து இறந்துவிட்டதாக கூறி உடலை எரிக்க உள்ளனர்.

இது குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தாம்பரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உதவியுடன் தாம்பரத்தில் பதுங்கி இருந்த அருண் பாண்டியன், முனியாண்டி, சேகர், எழில்குமார், விக்னேஷ், கந்தன், ஜானகிராமன் ஆகிய 7 பேரை கைது செய்தனர். இன்னும் 3 பேரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News