செய்திகள்
பழனி கோவில்

பழனி மலைக்கோவிலில் தமிழில் அர்ச்சனை தொடங்குவது எப்போது?- பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-08-10 10:28 GMT   |   Update On 2021-08-10 10:28 GMT
பழனி மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில் மற்றும் பெரியநாயகிஅம்மன் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி:

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை நேற்று முதல் தொடங்கியது. சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் இதனை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு விரைவில் தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு கோவிலிலும் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து விளம்பர பலகை வைக்கப்பட்டு அதில் எந்த அர்ச்சகர் இதனை செய்ய உள்ளார் என்பது குறித்த பெயர் மற்றும் செல்போன் எண் தெரிவிக்கப்படும் என்றார். இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு செய்வது குறித்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

நேற்று சென்னையில் இத்திட்டம் தொடங்கியதையடுத்து தமிழகத்தில் முக்கிய கோவில்களில் இதுசெயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனிக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி வந்து செல்கின்றனர். இதேபோல வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் வருகையும் இருந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்கடவுள் முருகனுக்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்த்த நிலையில் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில் மற்றும் பெரியநாயகிஅம்மன் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகை வைத்தபிறகு அரசு உத்தரவை தொடர்ந்து பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News