செய்திகள்
தமிழக அரசு

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும்- மத்திய அரசுக்கு கோரிக்கை

Published On 2021-04-15 11:41 GMT   |   Update On 2021-04-15 11:41 GMT
தமிழகத்துக்கு கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டு, 5 லட்சம் கோவாக்சின் வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை 41 லட்சத்து 72 ஆயிரத்து 963 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட 14 லட்சத்து 11 ஆயிரத்து 194 பேரும், 45 வயதுக்கு மேற்பட்ட 13 லட்சத்து 93 ஆயிரத்து 811 பேரும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கப்பட்டது. இதையடுத்து நாளை வரை 3 நாட்கள் தொடர்ச்சியாக தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து இடங்களுக்கும் சுகாதாரப் பணியாளர்கள் இன்று நேரடியாக சென்று தடுப்பூசிகளை போட்டனர். நாளையும் இந்த பணி தொடர்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதை அரசு தீவிரப்படுத்தி வரும் சூழலில் கூடுதல் மருந்து கேட்டு மத்திய அரசிடம்  கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்துக்கு கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டு, 5 லட்சம் கோவாக்சின் வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.
Tags:    

Similar News