செய்திகள்
சரத்குமார்

வங்கி கடனை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்- முதல்வருக்கு சரத்குமார் வேண்டுகோள்

Published On 2021-06-11 05:02 GMT   |   Update On 2021-06-11 05:02 GMT
வேலைவாய்ப்பு இல்லாமல், வருமானம் இல்லாமல் மக்களின் வாழ்வாதாரம் வீட்டுக்கடன், தனிக்கடன், வாகனக்கடன், நகைக்கடன் என பல விதமான கடனில் மக்கள் சிக்கித்தவிக்கிறார்கள்.

சென்னை:

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனாவால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் அமல்படுத்தியிருக்கக்கூடிய ஊரடங்கை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றால், பொருளாதார அடிப்படையில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவும், தொழில் இல்லாமல், வணிகம் இல்லாமல், வியாபாரம் இல்லாமல் மக்கள் வேதனையில் உழன்று வாடும் உணர்வை புரிந்திருப்பார்கள்.

வேலைவாய்ப்பு இல்லாமல், வருமானம் இல்லாமல் மக்களின் வாழ்வாதாரம் வீட்டுக்கடன், தனிக்கடன், வாகனக்கடன், நகைக்கடன் என பல விதமான கடனில் மக்கள் சிக்கித்தவிக்கிறார்கள்.

பொருளாதார ரீதியாக அரசு மக்களுக்கு உதவ வேண்டுமெனில், 6 மாதங்களுக்கு வங்கிகள் எவருக்கும் அழுத்தம் தராமல் சுதந்திரமாக தொழில் செய்ய வழிவகுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மருத்துவ நிபுணர்களின் கணிப்புப்படி 3 -ம் அலை வந்து மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், நிச்சயமாக மத்திய அரசு ஒரு வருடத்திற்கு வங்கிக் கடன்களை திரும்ப செலுத்துவதை நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், 12 மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய நிதி அமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுனர் கவனத்திற்கு எடுத்துச் சென்று இரண்டு காலாண்டு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்த கருத்தை வழிமொழிகிறோம்.

அதேசமயம், தமிழக அரசு உடனடியாக மத்திய அரசிடம் நேரடியாக தொடர்பு கொண்டு கூடுதல் அழுத்தம் கொடுத்து கால அவகாசம் பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News