செய்திகள்
மின்தடை

பனைக்குளத்தில் 3-வது நாளாக இரவில் தொடரும் மின்தடை: பொதுமக்கள் தூக்கமில்லாமல் அவதி

Published On 2019-09-17 11:47 GMT   |   Update On 2019-09-17 11:47 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியில் கடந்த 3 நாட்களாக இரவில் மின்தடை ஏற்படுவதால் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை தூக்க மில்லாமல் பெரும் அவதியடைந்தனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தில் துணை மின்நிலையம் உள்ளது. இங்கிருந்து அழகன்குளம், பனைக்குளம், பெருங்குளம், புதுவலசை, ஆற்றாங்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக மின்சாரம் தடை என்பது தொடர்கதையாக உள்ளது.

ஆயிரக்கணக்கான மின் இணைப்புகள், உள்ள பனைக்குளத்தில் இரவில் வயர்மேன் தங்குவது கிடையாது. இதன் காரணமாக இரவு 8 மணிக்கு மேல் மின்தடை ஏற்பட்டால் அடுத்த நாள் காலை வரை மின்தடை தொடரும் நிலை உள்ளது. கடந்த 3 தினங்களாக இதே நிலை தொடர்கிறது. இதனால் மக்கள் பெரும் அவதியடைகின்றனர். குறைந்த அழுத்த மின் சாரத்தால் குளிர்பதன பெட்டியில் உள்ள உணவு பொருட்கள் அனைத்தும் துர்நாற்றம் ஏற்பட்டு குப்பையில் வீசி வருகின்றனர்.

இது குறித்து த.மு.மு.க. முன்னாள் மாவட்ட தலைவர் பனைக்குளம் பரக்கத்துல்லா கூறியதாவது:-

மழை பெய்வதால் மின்தடை ஏற்பட்டிருக்கும் என்று மக்கள் நினைத்திருந்தனர். மழை பெய்யாத போதும் இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுகிறது. மின்சார ஊழியர்கள் யாரும் இங்கு தங்குவது கிடையாது. இதனால் இரவு நேரத்தில் ஏதேனும் பெரிய அளவிலான மின்விபத்து ஏற்பட்டால் கூட அதை தடுப்பதற்கு மின் ஊழியர்கள் கிடையாது. இதனால் உயிர்பலி அபாயம் உள்ளது. இரவில் தொடரும் மின்தடையால் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை தூக்கமில்லாமல் சிரமம் அடைகின்றனர்.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற மின்தடை ஏற்படாமல் இருக்க போர்க்கால நடவடிக்கை எடுத்து மின்சார ஊழியர்கள் பனைக்குளத்தில் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதே நிலை நீடித்தால் மாவட்ட த.மு.மு.க. சார்பில் மின்சார வாரியத்தை கண்டித்து மக்களை திரட்டி பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News