செய்திகள்
ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதை காணலாம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை

Published On 2021-07-22 05:29 GMT   |   Update On 2021-07-22 05:29 GMT
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கார் சாகுபடி நடைபெற்று வருவதால் விவசாயத்திற்கு அனைத்து அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைந்த அளவில் பெய்துள்ளது.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அடவி நயினார் அணைப்பகுதியில் 6 மில்லிமீட்டர், மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் குறைந்த அளவே மழை பெய்துள்ளது.

மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. காலை, மாலை நேரங்களில் சாரல் காற்று வீசுகிறது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அருவிக்கரையோரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 547 கனஅடி தண்ணீர் இன்று காலை வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக வினாடிக்கு 1,405 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை பாபநாசம் அணை நீர்மட்டம் 109.45 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 109.48 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 28 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக வினாடிக்கு 305 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 72.35 அடியாக உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 68.90, ராமநதி 66.50, கருப்பாநதி 63.32, அடவிநயினார் 123.25, கொடுமுடியாறு 28.75, வடக்கு பச்சையாறு 16.66, நம்பியாறு 11.87 அடிகளாகவும் நீர்மட்டம் உள்ளது. குண்டாறு அணை முழு கொள்ளளவான 36.10 அடியை எட்டி தொடர்ந்து நிரம்பி வழிகிறது.

தற்போது நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கார் சாகுபடி நடைபெற்று வருவதால் விவசாயத்திற்கு அனைத்து அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போதுதான் நெற்பயிர்கள் நடவு முடிந்து பச்சை பசேல் என்று வளர தொடங்கி உள்ளன.

மேலும் குறைந்தது 2 மாதங்களுக்கு தண்ணீர் தேவை. ஆனால் தென்மேற்கு பருவமழை குறைந்து உள்ளதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்தமாதம் கூடுதலாக தென்மேற்கு பருவமழை பெய்தால் மட்டுமே விவசாயத்திற்கு தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைக்கும் நிலை உள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

அடவிநயினார்-6, கடனாநதி-5, குண்டாறு-4, செங்கோட்டை-3, தென்காசி-2, பாபநாசம்-2, சேர்வலாறு-1.




Tags:    

Similar News