இந்தியா
டிகே சிவக்குமார்

மக்களின் நலன் கருதி மேகதாது பாதயாத்திரை தியாகம்: டி.கே.சிவக்குமார்

Published On 2022-01-15 01:42 GMT   |   Update On 2022-01-15 01:42 GMT
மக்களின் நலன் கருதி இந்த பாதயாத்திரையை தியாகம் செய்கிறோம். இதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் கனகபுராவில் உள்ள எனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தேன். நள்ளிரவில் உதவி கலெக்டர் வந்து நோட்டீசு வழங்கினார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட கலெக்டரின் கையெழுத்து இருந்ததால் நான் அதை வாங்க மறுத்தேன். இதையடுத்து அந்த நோட்டீசை சுவரில் ஒட்டிவிட்டு சென்றார். கொரோனா பரவி வரும் இந்த நேரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

அதனால் மக்களின் நலன் கருதி இந்த பாதயாத்திரையை தியாகம் செய்கிறோம். இதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். நாங்கள் பாதயாத்திரை தொடங்கிய நாளில் நோயாளிகள் யாரும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கவில்லை. இந்த அரசு திட்டமிட்டே கொரோனா பாதிப்பை அதிகரித்து காட்டியுள்ளது. பெங்களூரு மாநகராட்சி சார்பில் பசவனகுடியில் உள்ள மைதானத்தில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அந்த அனுமதியை இன்று (நேற்று) காலை ரத்து செய்துள்ளனர். அனுமதி வழங்கும்போது அவர்களுக்கு ஞானம் இருக்கவில்லையா?.

நானும், சித்தராமையாவும் பாதயாத்திரை மேற்கொண்டாலும் தொண்டர்கள் வந்து கூட்டமாக கூடுவார்கள். அதனால் பாதயாத்திரையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளோம்.

டி.கே.சிவக்குமார் கூறினார்.
Tags:    

Similar News