செய்திகள்
வைகை அணை

வைகை கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை

Published On 2019-12-05 06:05 GMT   |   Update On 2019-12-05 06:05 GMT
வைகை அணை நீர்மட்டம் 68 அடியை எட்டியதைத் தொடர்ந்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மாவட்டத்தில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மூல வைகை ஆறு மற்றும் முல்லைப் பெரியாறு அணை மூலம் வைகை அணைக்கு நீர்வரத்து உள்ளது. தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் வைகை அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து 68 அடியை எட்டியுள்ளது.

இதனால் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஆற்றை கடக்க வேண்டாம். வெள்ளத்தை வேடிக்கை பார்க்க வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

71 அடி முழு கொள்ளளவு கொண்ட வைகை அணையில் 69 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. 69 அடிய எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்து விடப்படும். தற்போது அணைக்கு 2775 கன அடி நீர் வருகிற நிலையில் 160 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.80 அடியாக உள்ளது. 1402 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1690 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.80 அடியாக உள்ளது. 192 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 126.47 அடியாக உள்ளது. 93 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடி 0.4, மஞ்சளாறு 3 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.



கொடைக்கானலில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர். இன்று காலை நீர்வரத்து சீராகியது. எனவே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதே போல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியிலும் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக நீராடிச் சென்றனர்.


Tags:    

Similar News