ஆன்மிகம்
சபரிமலை

சபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை

Published On 2020-11-25 05:13 GMT   |   Update On 2020-11-25 05:13 GMT
சபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
திருவனந்தபுரம் :

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. கோவிலில் முன்பதிவு அடிப்படையில் தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில், சபரிமலை தரிசனம் தொடர்பாக திருவிதங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு நிருபர்களிடம் கூறியதாவது:-

சபரிமலை கோவிலில் மண்டல காலத்தில் தினசரி ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் முன்பதிவு செய்துள்ள ஆயிரம் பேரில் குறைவான எண்ணிக்கையிலான பக்தர்களே சபரிமலைக்கு வருகிறார்கள்.

அதேநேரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தேவஸ்தான அலுவலகத்தை போன் மூலமாகவும், கடிதங்கள், இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொண்டு தரிசனத்திற்கு அனுமதி கேட்டு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே தேவஸ்தானத்தின் விருப்பம். கொரோனா கட்டுப்பாடு தடை உத்தரவுகளை பின்பற்றி தனி மனித இடைவெளியுடன் தினசரி 10 ஆயிரம் பக்தர்களை சபரிமலை தரிசனத்திற்கு தாராளமாக அனுமதிக்கலாம்.

பம்பையில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மற்றும் நெய்யபிஷேகத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு ஆகியவை கோவிலின் ஆசாரத்திற்கு எதிரானது என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தும் எண்ணம் தேவஸ்தானத்திற்கு இல்லை.

கடந்த ஆண்டுகளில் மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலையின் தினசரி வருமானம் கோடி ரூபாயை தாண்டி இருந்தது. ஆனால் தற்போது தினசரி வருமானம் ரூ.10 லட்சத்தை எட்டுவது சவாலாக உள்ளது. எனவே அரசு சபரிமலை தரிசனத்திற்கு தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News