செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.

மயிலாடுதுறையில் கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-02-23 14:01 GMT   |   Update On 2021-02-23 14:01 GMT
மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமை தாங்கினார். நகர, ஒன்றிய செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் வரவேற்று பேசினார். இதில் கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குத்தாலம் கல்யாணம் கலந்து கொண்டு பேசினார். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின்போது தி.மு.க.வினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் பாதிப்பை உணர்த்தும் வகையில் ஆம்புலன்ஸ் ஒன்றை மாட்டு வண்டியில் கட்டி சிறிது தூரம் இழுத்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாலை அணிவிக்கப்பட்ட 2 கியாஸ் சிலிண்டர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குத்தாலம் அன்பழகன், அருள்செல்வன், சத்தியசீலன், பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றியக்குழு தலைவிகள் காமாட்சி மூர்த்தி, நந்தினிஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இமயநாதன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News