செய்திகள்
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி

சவுத்தம்டன் டெஸ்டில் விராட் கோலி, ரகானே நிதான ஆட்டம் - இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 146/3

Published On 2021-06-19 18:02 GMT   |   Update On 2021-06-19 18:02 GMT
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் முதல் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
சவுத்தம்டன்:

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலகடெஸ்ட்- சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது.

தொடர் மழையால் ‘டாஸ்’ கூட போடப்படாத நிலையில் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில், 2-வது நாளான இன்று டாஸ் போடப்பட்டதில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
 
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். 

இருவரும் நிதான ஆட்டத்தை தொடர்ந்தனர், கிடைத்த சந்தர்ப்பத்தில் பவுண்டரிகளும் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது.



அணியின் எண்ணிக்கை 62 ஆக இருக்கும்போது ரோகித் சர்மா 34 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து சுப்மன் கில்லும் 28 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய புஜாரா 8 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். 

தொடர்ந்து இறங்கிய கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் விளையாடினார், அவருக்கு ரகானேவும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி பொறுமையாக விளையாடி 58 ரன்கள் சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 146 ஆக இருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முன்னதாக முடித்துக் கொள்ளப்பட்டது.

இரண்டாம் நாளில் இந்தியா 66.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 44 ரன்னுடனும், ரகானே 29 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

நியூசிலாந்து சார்பில் போல்ட், ஜேமிசன் மற்றும் வாக்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
Tags:    

Similar News