செய்திகள்
தேஜாஸ் போர் விமானம்

விமானப்படைக்கு புதிதாக 83 தேஜாஸ் போர் விமானங்கள் - மத்திய அரசு ஒப்புதல்

Published On 2021-01-14 02:44 GMT   |   Update On 2021-01-14 02:47 GMT
இந்திய விமானப்படைக்கு ரூ.48 ஆயிரம் கோடியில் 83 தேஜாஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு தனது ஒப்புதலை அளித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் ஒரு பக்கம் பாகிஸ்தான் சண்டை நிறுத்த ஒப்பந்தங்களை மதிக்காமல், எல்லையில் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபடுகிறது. பயங்கரவாதிகளை கொண்டு தாக்குதல் நடத்தி மறைமுக போரையும் நடத்துகிறது.

மற்றொரு பக்கம், சீனா தொடர்ந்து எல்லையில் வாலாட்டிக்கொண்டிருக்கிறது. லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், அந்த நாடு தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்கள் நடத்தியது. இந்தியா சரியான பதிலடி கொடுத்தது. அதன்பின்னர் இரு தரப்பிலும் படைகளும், தளவாடங்களும் குவிக்கப்பட்டு போர் பதற்றம் நிலவுகிறது.

இந்த சூழலில் இந்தியா தனது படை பலத்தை, ஆயுத பலத்தை, தளவாட பலத்தை அதிகரிக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு முடுக்கி விட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய பாதுகாப்பு துறைக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் ஒரு மிக முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது.

அந்த முடிவு, இந்திய விமானப்படையை மேலும் வலுப்படுத்தவதற்கு, உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள 83 லகுரக தேஜாஸ் போர் விமானங்களை ரூ.48 ஆயிரம் கோடியில் வாங்குவது ஆகும். இந்த தகவலை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:

இந்தியாவில் பாதுகாப்பு துறை தளவாட உற்பத்தியில், தற்சார்பில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி அமைக்கக்கூடிய ஒரு ஒப்பந்தம், இந்த ஒப்பந்தம் ஆகும்.

தேஜாஸ் போர் விமானங்கள், இனி வரும் ஆண்டுகளில் இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக திகழும்.

3 ஆண்டுகளுக்கு முன்பு, நான்கரை தலைமுறை போர் விமானங்களான தேஜாஸ் போர் விமானங்களை (83 எண்ணிக்கை) வாங்குவதற்கு இந்திய விமானப்படை ஆரம்ப டெண்டரை வெளியிட்டது.

இந்த விமானம், இதுவரை இந்தியாவில் முயற்சிக்கப்படாத வகையில் ஏராளமான புதிய தொழில்நுட்பங்களை கொண்டதாகும். உள்நாட்டில் உருவாக்கப்படும் இந்த விமானம், எம்.கே.1ஏ வகையின் 50 சதவீதம் ஆகும். இது 60 சதவீத அளவுக்கு உயர்த்தப்படும்.

விமான தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தனது நாசிக் (மராட்டியம்) மற்றும் பெங்களூரு பிரிவுகளில் இரண்டாம் வரிசை உற்பத்தி வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. வளர்ந்த உள் கட்டமைப்பு வசதிகளை கொண்ட இந்த நிறுவனம், இந்திய விமானப்படைக்கு உரிய நேரத்தில் தேஜாஸ் போர் விமானங்களை வழங்குவதற்கு வழிநடத்தும்.

தேஜாஸ் போர் விமான கொள்முதல் திட்டம், இந்திய வான்வெளி உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை துடிப்பான, தன்னிறைவு கொண்ட ஒன்றாக மாற்றுவதற்கான வினைஊக்கியாக செயல்படும்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை பாதுகாப்பு துறைக்கான மத்திய மந்திரிகள் குழு எடுத்திருப்பதற்காக நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News