ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

பொறுமையாளர்களுக்கு கிடைக்கும் பலன்கள்

Published On 2021-04-20 02:47 GMT   |   Update On 2021-04-20 02:47 GMT
‘ரமலான் மாதம் பொறுமையின் மாதம்; பொறுமையின் கூலி சுவனம் ஆகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸல்மான் (ரலி), நூல்: மிஷ்காத்)
புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருஸ் ஸப்ர்’ - ‘பொறுமையின் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

‘ரமலான் மாதம் பொறுமையின் மாதம்; பொறுமையின் கூலி சுவனம் ஆகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸல்மான் (ரலி), நூல்: மிஷ்காத்)

ஒருவருக்கு பசி ஏற்பட்டால், அவர் தன்னை கட்டுப்படுத்துவது சிரமம். பசியும், தாகமும் மனிதனை பாடாய்படுத்திவிடும். பசித்தவன் பொறுமையுடன் இருப்பது முடியாத காரியம். இந்த நிலையிலும் ஒரு நோன்பாளி அனைத்தையும் சகித்துக் கொண்டு பொறுமை காக்க வேண்டும்.

ஒரு நோன்பாளிக்கு சண்டை ஏற்படும் சூழ்நிலை வந்தாலும், அதில் அவர் ஈடுபடாமல் பொறுமை காக்க வேண்டும் என நபி (ஸல்) பின்வருமாறு உபதேசிக்கிறார்கள்:

“யாரேனும் நோன்பாளியுடன் சண்டைக்கு வந்தால், அல்லது ஏசினால், ‘நான் நோன்பாளி’ என்று இருமுறை கூறட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்” (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

சகிப்புத்தன்மை புனிதமானது; தெய்வீகமானது. அவசர நிலை; மனித இயல்பு. ரமலான் மாதம் தெய்வீகத்தன்மையை மனிதனுக்கு பழக்கப்படுத்தி, அவனை பக்குவப்படுத்துகிறது.

இதுகுறித்த திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் வருமாறு:-

‘நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயம் இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 2:153)

பொறுமை மூன்று வகை: 1) பாவங்களையும், தடுக்கப்பட்டவைகளையும் செய்வதிலிருந்து சகித்து இருப்பது, 2) தொடர்ந்து நன்மைகள் செய்வதற்கு பொறுமையாக இருப்பது, 3) சோதனைகள் மீது பொறுமையை கடைப்பிடிப்பது. இந்த மூன்று நிலைகளிலும் சகிப்புத் தன்மையை கடைப்பிடிப்பது தான் உண்மையான பொறுமை.

இந்த பொறுமையை ரமலான் மாத நோன்பின் வழியாக மிக எளிதாக பெற்றுக் கொள்ள முடியும். ஏனென்றால், ரமலான் மாதம் பொறுமைக்குரிய மாதம். சோதனை காலத்தில் பொறுமையை வலியுறுத்தும் பக்குவம் நோன்புக்கு மட்டுமே உண்டு.

‘பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கைக்கொள்வதேயாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

ஆயிஷா (ரலி) கூறினார்: ‘நான் நபி (ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது, தான் நாடியவர்கள் மீது இறைவன் அனுப்புகிற வேதனையாகும். அல்லாஹ் அதை இறைநம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான். மேலும், கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் பொறுமையாளராகவும், இறை வெகுமதியை விரும்பியவராகவும், இறைவன் நமக்கு எழுதியுள்ள விதிப்படியே தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது எனும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: புகாரி)

எனவே, நோய்கள் வடிவில் எத்தனை சோதனை வந்தாலும், அதை நாம் பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும். அந்தப் பொறுமையே நமக்கு நற்பலனை பெற்றுத்தரும்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

இப்தார்: மாலை 6.38 மணி

நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.33 மணி
Tags:    

Similar News