உள்ளூர் செய்திகள்
நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் பேசிய போது எடுத்த படம்.

அ.தி.மு.க. கட்சி பதவிகளுக்கு விருப்ப மனு

Published On 2022-04-17 09:13 GMT   |   Update On 2022-04-17 09:13 GMT
அரியலூரில் அ.தி.மு.க. கட்சி பதவிகளுக்கு விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர்:


அரியலூர் தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர் பதவிகளுக்கு அமைப்பு தேர்தலில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.

முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. இளவரசன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை எம்எல்ஏ தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:

கடந்த 2010 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாடு தான் திருப்புமுனையாக அமைந்து, 2011&ல் அ.தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. தொடர்ந்து பத்தாண்டு காலம் அ.தி.மு.க.வை யாரலும் வெல்ல முடியவில்லை.

ஆனால், நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெறும் 3 சதவீதம் வாக்குகள் மட்டுமே கூடுதல் பெற்று தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இது நிலையான வெற்றிக் கிடையாது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. அவரது வழியில் ஒருங்கிணைப்பாளர்களும் செயல்பட்டனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒராண்டுக்குள்ளாகவே, அ.தி.மு.க.வினர் மீது வழக்கு மேல் வழக்கு போட்டு வருகின்றனர். ஆனால் எத்தனை வழக்குகள் போட்டாலும் தி.மு.க.வின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம். ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.

தற்போது தி.மு.க.வினர் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து உழைத்தால் வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் நமக்கு பெரிய அளவில் வெற்றிக் கிடைக்கும். 2024&ல் அ.தி.மு.க. தான் ஆளும் கட்சியாக இருக்கும் என்றார் அவர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிகையில், திராவிட மாடல் ஆட்சி என்பது அ.தி.மு.க ஆட்சியே. திராவிட மாடல் ஆட்சி எனக்கூறும் தி.மு.க.வின் ஆட்சியில் பல்வேறு தரப்பட்ட மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தி.மு.க.வை வெற்றி பெறச்செய்து, ஆட்சியில் அமர வைத்த மக்களுக்கு, பல்வேறு பரிசுகள் காத்திருக்கிறது.

தற்போது தான் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. மிக விரைவில் மின்சார கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை உயர்த்தி மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி அமையும். நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றார்.

Tags:    

Similar News