தமிழ்நாடு
அதிகாரிகள் விசாரணை

மன உளைச்சலால் தற்கொலை செய்வதாக கூறி சென்ற பெண் இன்ஸ்பெக்டரிடம் அதிகாரிகள் விசாரணை

Published On 2022-04-15 08:52 GMT   |   Update On 2022-04-15 08:52 GMT
பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் திடீரென தற்கொலை செய்வதாக கூறி சென்றதால் போலீசார் மத்தியில் பரபரப்பு நிலவியது.
ஈரோடு:

ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் நீலாதேவி (44). இவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு பணியிடம் மாறுதலாகி வந்தார்.

ஈரோடு சூரம்பட்டி வலசு காந்திஜி வீதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாகவே பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த விக்ரம்-உஷாநந்தினி என்கிற காதல் கலப்பு திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இன்ஸ்பெக்டர் நீலாதேவி இருவீட்டு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உஷாநந்தினி பெற்றோரிடம் செல்ல விரும்பவில்லை என்றும் விக்ரமுடன் செல்வதாகவும் உறுதியாக கூறினார்.

அதைத்தொடர்ந்து போலீசார் வழக்கம்போல் சமரசம் செய்து வைத்து காதல் ஜோடியை ஒன்றாக அனுப்பி வைத்தனர். அந்த காதல் ஜோடி காரில் புறப்பட்டு சென்றபோது கள்ளுக்கடை மேடு என்ற பகுதியில் 3 கார்களில் வந்த உஷா நந்தினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விக்ரமை தாக்கி உஷா நந்தினியை கடத்தி சென்றனர்.

இது குறித்த தகவலை இன்ஸ்பெக்டர் நீலாதேவி உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த புதுமண தம்பதியை போதிய பாதுகாப்பின்றியும், பெண் வீட்டாரின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் எவ்வித முன்னேற்பாடும் இன்றி அனுப்பியதால் தான் இந்த சம்பவம் நடந்ததாக உயர் போலீஸ் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் நீலாதேவியை போனில் தொடர்பு கொண்டு கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் இன்ஸ்பெக்டர் நீலாதேவி கடந்த 2 நாட்களாக மன உளைச்சலுடன் சரியாக தூங்காமல் இருந்துள்ளார். நேற்று காலை ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் நீலாதேவி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது மனவேதனையுடன் இருந்த நீலாதேவி திடீரென வாக்கி டாக்கி உள்ளிட்ட பொருட்களை அருகிலுள்ள மற்றொரு போலீசாரிடம் கொடுத்துவிட்டு நான் சாகப் போகிறேன் என்று கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நீலாதேவி வீட்டிற்கு சென்று சாதாரண உடையை மாற்றிவிட்டு சோலாரில் உள்ள தனது தோழி வீட்டுக்கு மொபட்டில் சென்றார். அப்போது அவரது வீட்டில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதில் இன்ஸ்பெக்டர் நீலாதேவிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரது தோழி அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறிய இன்ஸ்பெக்டர் நீலாதேவி இன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றார். பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் திடீரென தற்கொலை செய்வதாக கூறி சென்றதால் போலீசார் மத்தியில் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் நீலாதேவியிடம் இன்று உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். எதற்காக அவர் தற்கொலை செய்வதாக கூறி சென்றார் என்று அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

இதற்கிடையே இன்ஸ்பெக்டர் நீலாதேவி விடுமுறையில் செல்லப்போகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News