செய்திகள்
நீட் தேர்வு

கோவை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு

Published On 2021-09-08 11:03 GMT   |   Update On 2021-09-08 11:03 GMT
கொரோனா காரணமாக தேர்வு மையங்களை தூய்மையாக சுத்தப்படுத்தி சுகாதார பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை:

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு எழுதுவதற்காக கோவை மாவட்டத்தில் 8 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் நீட் தேர்வை மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர். இதைத்தொடர்ந்து வருகிற 12-ந்தேதி நீட் தேர்வு நடைபெறும் நாளில் 8 மையங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், மாணவர்களுக்கு தேவையான கூடுதல் பஸ்களை இயக்குமாறும் சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

தொடர்ந்து தேர்வு நடைபெறும் கல்வி நிலையத்திற்கு போலீசார் மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திடவும், தேர்வு மையங்களின் அருகில் சிறப்பு மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் வைத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கொரோனா காரணமாக தேர்வு மையங்களை தூய்மையாக சுத்தப்படுத்தி சுகாதார பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் தங்களின் தேர்வு மையங்களை கண்டறிந்து முன் கூட்டியே அங்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு அறைக்குள் செல்போன், கம்மல், செயின், கொலுசு உள்ளிட்டவற்றுடன் செல்ல அனுமதி கிடையாது. இதே போல் தேர்வன்று மாணவ- மாணவிகள் தவிர மற்றவர்கள் தேர்வு மையத்திற்கு செல்ல அனுமதி கிடையாது எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News