செய்திகள்
எச்1 பி விசா

‘எச்1 பி’ விசா மீதான கட்டுப்பாடு - டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு

Published On 2020-10-20 21:06 GMT   |   Update On 2020-10-20 21:06 GMT
அமெரிக்காவில் ‘எச்1 பி’ விசா மீதான கட்டுப்பாடு தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு ‘எச்1 பி’ என்கிற பணியாளர் விசா வழங்கப்பட்டு வருகிறது. ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.

இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். சமீபத்திய தரவுகளின்படி அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த ‘எச்1 பி’ விசாதாரர்களில் 70 சதவீதம் பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

ஆனால் ‘எச்1 பி’ விசாவால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாக கூறி ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ‘எச்1 பி’ விசா நடைமுறையில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறது.

அந்த வகையில் வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ள அமெரிக்க நிறுவனங்கள் ‘எச்1 பி’ விசா மூலம் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்கிற புதிய விதியை ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் இம்மாத தொடக்கத்தில் கொண்டு வந்தது.

இந்த விதி அமெரிக்கர்களுக்கு மாற்றாக வெளிநாட்டு தொழிலாளர்களை குறைந்த ஊதியத்தில் பணி அமர்த்தும் திறனை மட்டுப்படுத்தும் என்றும் திறமை வாய்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே ‘எச்1 பி’ விசா வழங்கப்படுவதை உறுதி செய்யும் என்றும் டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.

இந்த நிலையில் ‘எச்1 பி’ விசா நடைமுறையில் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்துள்ள புதிய விதிமுறையை ரத்து செய்யக்கோரி அமெரிக்காவைச் சேர்ந்த 15 பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் 17 தனி நபர்கள் சேர்ந்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தலைநகர் வாஷிங்டனில் உள்ள கொலம்பியா மாவட்ட கோர்ட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்க குடிவரவு வக்கீல் சங்கத்தின் கூட்டாட்சி வழக்கு இயக்குனர் ஜெஸ்சி பிளஸ் இந்த வழக்குக்கான மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் டிரம்ப் நிர்வாகத்தின் புதிய விதிமுறை மிகவும் மோசமாக மற்றும் முறையற்ற ரீதியில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை உருவாக்குவதற்கான நடைமுறை விதி கடைபிடிக்கப்படவில்லை என்றும் எனவே புதிய விதி முறையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் அதற்கு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு குறித்து ஜெஸ்சி பிளஸ் கூறுகையில் “நடைமுறையில் உள்ள ஊதியங்களின் அதிகரிப்பு அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கோ அல்லது ஏதேனும் தொழிலாளர்களுக்கோ பயனளிக்காது. ‘எச்1 பி’ விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்க வேலைகளை உருவாக்குகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன” என்றார்.

மேலும் அவர் “இந்த புதிய விதி, கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள், லாபநோக்கமற்ற நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகங்கள் என பொருளாதாரத்தின் ஒவ்வொரு மூலையிலும் உடனடி மற்றும் தேவையற்ற தீங்கை விளைவித்தது. அமெரிக்க தொழிலாளர் தொகுப்பை பற்றிய தவறான புரிதலை அடிப்படையாக கொண்ட இந்த விதி பொருளாதார மீட்சிக்கு தடையாக இருக்கும். எனவே இது உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்” எனவும் கூறினார்.
Tags:    

Similar News