செய்திகள்
மழை

புதுவையில் விடிய, விடிய கனமழை- நகர சாலைகளில் வெள்ளப்பெருக்கு

Published On 2021-02-21 04:00 GMT   |   Update On 2021-02-21 04:24 GMT
புதுவையில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்க தொடங்கி உள்ளது. நகரப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
புதுச்சேரி:

புதுவையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழை பெய்தது.

தொடர்ந்து நிவர் மற்றும் புரெவி புயலில் பெய்த கனமழையால் ஏரி, குளம் என பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் மழை இல்லை. ஆனால், பனிப்பொழிவு இருந்தது.

இந்த நிலையில் வளிமண்டல மேல் அடுக்கில் மேற்கு திசை காற்று சுழற்சி காரணமாகவும், கீழ் அடுக்கில் கிழக்கு திசை காற்றின் சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 2 நாட்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

நேற்றைய தினம் புதுவையில் பகலில் வெயில் அடித்தது. மதியம் 12 மணி அளவில் லேசான மழை பெய்தது. ஆனால், மழை தொடரவில்லை இந்த நிலையில் இரவு 10 மணியளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

லேசாக பெய்ய தொடங்கிய மழை வேகமெடுத்து நள்ளிரவில் கனமழையாக மாறியது. தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்த வண்ணம் உள்ளது. அதிலும் அதிகாலை 4 மணிக்கு மேல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்க தொடங்கி உள்ளது. நகரப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகரின் ஒருசில பகுதிகளில் வீடுகளை சுற்றி மழை வெள்ளம் சூழ தொடங்கி உள்ளது.

தொடர்ந்து, கனமழை நீடித்தால் வீடுகளுக்குள் மழை நீர் உட்புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News