செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்ட பிடிசி குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர்

தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

Published On 2021-11-29 06:39 GMT   |   Update On 2021-11-29 06:39 GMT
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி, குறைகளை கேட்டறிந்தார்.
சென்னை:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த 15 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

இந்த மழை நீர் பாதிப்பு முடிவதற்குள் அடுத்தடுத்து கடந்த 2 நாட்களாக மீண்டும் கன மழை பெய்தது. இதில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல இடங்களில் மீண்டும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மழை வெள்ளம் பாதித்த தி.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் நேரில் சென்று பார்வையிட்டு அங்கு மழை நீரை வடிய வைக்க துரித நடவடிக்கை மேற்கொண்டார்.

இதே போல் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆவடி, பூந்தமல்லி, திருமுல்லைவாயல் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டார்.

தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

இதற்காக இன்று காலை 9.45 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின் நேராக தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரம் சென்றார். அங்கு அதிகமாக மழையால் பாதிக்கப்பட்ட பி.டி.சி. குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டார்.

அங்கு மழை நீரை வடிய வைக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்தார்.

அவருக்கு ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா ஆகியோர் அங்கு நடைபெற்று வரும் வெள்ள நிவாரண பணிகளை விளக்கி கூறினார்கள்.



மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அருகில் உள்ள வேல்ஸ் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு போர்வை, பாய், பிரட், பால், வேட்டி- சேலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

முடிச்சூர் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அங்குள்ள அமுதம் நகரில் மழையால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
வழங்கினார்.

பின்னர் அங்கிருந்து தாம்பரம், இரும்புலியூர் பகுதிக்கு சென்றார். அங்கு வானியன் குளம் பகுதியில் மழை நீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டார்.

அப்போது அதிகாரிகளிடம் இப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலிடனுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எஸ். ஆர்.ராஜா எம்.எல்ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.


Tags:    

Similar News