இந்தியா
நடிகை ஜாக்குலின்

ரூ.200 கோடி மோசடி வழக்கு - நடிகை ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை விசாரணை

Published On 2021-12-08 11:28 GMT   |   Update On 2021-12-08 11:28 GMT
பண மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது காதலியும், இந்தி நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

புதுடெல்லி:

இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் தொழில் அதிபர் மனைவியை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது காதலிகள் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது காதலியும், இந்தி நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதில் சுகேஷ் தனது காதலி ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த குதிரை, பாரசீக பூனை உள்பட ரூ.10 கோடி மதிப்புள்ளவற்றை பரிசாக அளித்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஜாக்குலின் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க ஏற்கனவே அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் துபாய் செல்ல முயன்றபோது மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பண மோசடி வழக்கில் ஜாக்குலினிடம் ஏற்கனவே அமலாக்கத்துறையினர் பலமுறை விசாரணை நடத்தி இருந்தனர்.

இந்த நிலையில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

Similar News