முக்கிய விரதங்கள்
விஷ்ணு

பாவங்களை போக்கி சௌபாக்கியத்தை அருளும் வருத்தினி ஏகாதசி விரதம்

Published On 2021-12-30 01:03 GMT   |   Update On 2021-12-30 01:03 GMT
பத்தாயிரம் ஆண்டுகள் தவம் புரிவதன் மூலம் அடையும் பலனை ஒருவர் இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் எளிதில் அடைவார்.
வைகாச மாதம் தேய்பிறையில் வருகின்ற ஏகாதசிக்கு வருதினி ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி விரதம் எல்லா வகையான பாவங்களையும் போக்கி சௌபாக்கியத்தைத்தரக்கூடியது. பிறவியைக் கடல் என்பார்கள். அந்தப் பிறவிக் கடலைக் கடக்க ஒரு தெப்பம் தேவை. அந்தத் தெப்பமே இந்த ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. யாரொருவர் இந்த ஏகாதசியின் பெருமைகளை படித்தாலோ அல்லது காதால் கேட்டாலோ அவர் நிச்சயமாக ஆயிரம் பசுக்களை தானம் செய்வதின் பலனை அடைவார் மற்றும் தன் எல்லா பாவ விளைவுகளினின்றும் விடுபட்டு பகவான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைவார்.

ஏப்ரல் / மே மாதங்களில் தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரக்கும் இடையிலான உரையாடலின் விவரிக்கப்பட்டுள்ளது. பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார் என தருமை மன்னா, இந்த ஏகாதசியின் பெயர் வருத்தினி. இது ஒருவருக்கு இந்த வாழ்க்கையிலும் அதற்கு பிறகும் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் ஒரு ஜீவன் தன் பாவ விளைவுகளை குறைத்துக்கொண்டு, நிரந்தமான ஆனந்தத்தை அடைந்து மிகுந்த பாக்கியசாலி ஆகிறான்.

இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் ஒரு துர்பாக்கியசாலியான மனைவியும் பாக்கியசாலி ஆகிறாள். ஒருவன் இப்பிறவியிலும் அதற்கு பின்னரும் ஆனந்தத்தையும் நல்ல அதிர்ஷ்டமும் அடைகிறான். அவர்கள் அனைத்து பாவ விளைவுகளும் நீங்கப்பெற்று பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து விடுபட்டு இறைவனின் தூய பக்தி தொண்டை அடைகின்றனர். இந்த ஏகாதசி விரதத்தை சரியான முறையில் கடைபிடித்து மன்தாதா என்ற மன்னன் முக்தி பெற்றார். மேலும் துந்துமாரா போன்ற பல மன்னர்கள் இந்த ஏகாதசியை கடைப்பிடித்து முக்தி பெற்றனர்.

பத்தாயிரம் ஆண்டுகள் தவம் புரிவதன் மூலம் அடையும் பலனை ஒருவர் இந்த ஏகாதசியை கடைப்பிடிப்பதன் மூலம் எளிதில் அடைவார். சூரிய கிரகணத்தின்போது குருக்ஷேத்திரத்தில் 40 கிலோ தங்கத்தை தானமாக கொடுப்பதன் மூலம் அடையும் புண்ணியத்தை ஒருவர் சுலபமாக இந்த வருத்தினி ஏகாதசியை கடைப்பிடிப்பதன் மூலம் அடைவார்.  மன்னர்களில் சிறந்தவனே, ஒரு குதிரையை தானமளிப்பதைவிட ஒரு யானையை தானம் அளிப்பது சிறந்தது. யானையை தானமளிப்பதைவிட நிலத்தை தானமளிப்பது சிறந்தது. நிலத்தை தானமளிப்பதைவிட எள் தானம் உயர்ந்தது எள் தானத்தைவிட பொன் தானம் உயர்ந்தது. பொன் தானத்தைவிட உணவு தானிய தானம் உயர்ந்தது. உணவு தானிய தானத்தைவிட உயர்ந்த தானம் எதுவும் இல்லை. ஓ, மன்னர்களில் சிறந்தோனே, உணவு தனியங்களை தானமளிப் பதன் மூலம் ஒருவர் தன் முன்னோர்களையும், தேவர்களையும் மற்றும் எல்லா ஜீவராசிகளையும் திருப்தி படுத்த முடியும்.

ஒருவர் தன் மகளை தாரைவார்த்து கொடுப்பது உணவு தானியங்களை தானமளிப்பதற்கு சமம் என கற்றறிந்த சான்றோர்கள் தெரிவிக்கின்றனர். உணவு தானிய தானத்தையும் பசுதானத்தையும் முழு முதற்கடவுளே சமபடுத்துகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து வகையான தானங்களை விட மற்றவர்களுக்கு ஞானத்தை அளிப்பதே மிக உயர்ந்ததாகும். வருத்தினி ஏகாதசியை கடைப்பிடிப்பதால் ஒருவர் எல்லா வித தானியங்களின் பலனையும் அடைவார்.

தன் மகளை விற்று வாழ்க்கை நடத்துபவன் மிகப்பெரிய பாவத்தை செய்தவன் ஆகிறான். அத்தகையவன் கடைசி பிரளயம் வரும் வரை நரகத்திலேயே வாழ வேண்டியவன் ஆகிறான். ஆகையால் ஒருவன் தன் மகளை தாரை வார்க்கும் பொருட்டு எந்த ஒரு செல்வத்தையும் ஏற்கக் கூடாது. ஒரு குடும்பஸ்தர், பேராசையின் காரணத்தால், செல்வத்திற்காக தன் மகளை விற்றால், அடுத்த பிறவியில் அவன் ஒரு  பூனை உடலை அடைகிறான். ஆனால், ஒருவன் தன் வசதிக்கேற்ப ஆபரணங்களால் தன் மகளை அலங்கரித்து, ஒரு நல்ல வரனுக்கு தாரை வார்த்து கொடுப்பதால் தான் அடையும் புண்ணியத்தை யமராஜாவின் செயலாளரான சித்திரகுப்தனாலும் கணக்கிட முடியாது.

இந்த ஏகாதசியைக் கடைப்பிடிப்பவர் வெண்கல பாத்திரத்தில் உண்ணுதல் மாமிசத்தை உண்ணுதல்,கீரை தேன் போன்றவற்றை உண்ணுதல், மற்றவர்கள் சமைத்த உணவை ஏற்றுக்கொள்ளுதல், போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சூதாட்டம், உறக்கம், வெற்றிலை பாக்கை சுவைத்தல், மற்றவர்களை குறை சொல்வது, பாவப்பட்ட ஒருவருடன் பேசுவது, கோபம் கொள்வது, பொய் சொல்வது ஆகியவற்றை ஏகாதசியன்று தவிர்க்க வேண்டும். மேலும் ஏகாதசிக்கு முன்தினத்திலிருந்தே உடலுறவை தவிர்க்க வேண்டும். ஒருவர் இந்த ஏகாதசியை விதிகளுக்குட்பட்டு கடைபிடித்தால் அவருடைய எல்லா பாவவிளைவுகளும் அழிந்து விடும், மற்றும் அவர் மிக உயர்ந்த இலக்கை அடைவார்.
Tags:    

Similar News