செய்திகள்
வெற்றிலை

கரூர் மாவட்டத்தில் உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்வு

Published On 2019-12-04 12:40 GMT   |   Update On 2019-12-04 12:40 GMT
கரூர் மாவட்டத்தில் வெற்றிலை உற்பத்தி குறைவால் விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடை, சேமங்கி, முத்தனூர், நடையனூர், கோம்பு பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், என்.புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை ரகங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் வெற்றிலைகளை வேலாயுதம் பாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், விவசாயிகள் அசோசியேசன் வெற்றிலை மண்டிக்கும் அனுப்பி வைக்கின்றனர்.  இப்பகுதிகளிலிருந்து தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதோசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மற்றும் ரெயில் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.  

கடந்த  வாரம் இளங்கால் வெள்ளைக் கொடி வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.3000-க்கும், முதிகால் வெள்ளக்கொடி வெற்றிலை ரூ.1500-க்கும் அதேபோல் இளங்கால் கற்பூரி வெற்றிலை ரூ.1600- க்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ரூ. 1000 வாங்கி சென்றனர்.  

இந்த வாரம் இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.4000-க்கும், முதிகால் வெள்ளக்கொடி வெற்றிலை ரூ.2000-க்கும் அதேபோல் இளங்கால் கற்பூரி வெற்றிலை ரூ.3000-க்கும்,  முதிகால் கற்பூரி வெற்றிலை ரூ. 1500க்கும் வாங்கி சென்றனர். 

வெற்றிலை உற்பத்தி குறைவால் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் நொய்யல் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைத்து,வெற்றிலைகளில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு தீர்வு காண வேண்டும் என நொய்யல் சுற்றுவட்டாரப்பகுதி வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News