உள்ளூர் செய்திகள்
புதுவை சட்டசபை

50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதுமானது- அரசு உத்தரவு

Published On 2022-01-18 03:05 GMT   |   Update On 2022-01-18 03:05 GMT
கொரோனா பரவல் எதிரொலியாக 50 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதுமானது என்று புதுவை அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி:

புதுவை அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு எதிரொலியாக மத்திய அரசின் உத்தரவின்படி அரசு அலுவலகங்கள் செயல்படுவது தொடர்பாக சில வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகிறது. இதன்படி அனைத்து ‘ஏ’ பிரிவு அதிகாரிகளும் அலுவலகம் வரவேண்டும்.

அதேபோல் சார்பு செயலாளர்கள், துறைத்தலைவர்கள், அலுவலக தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், பிற நிர்வாக தலைவர்கள் அனைவரும் பணிக்கு வரவேண்டும். குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு அலுவலர்கள் 50 சதவீதம் பேர் சுழற்சி முறையில் பணிக்கு வந்தால் போதுமானது.

மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி ஊழியர்களுக்கு அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம்.

அத்தியாவசிய தேவை பணிகளில் இருப்பவர்களுக்கு இந்த 50 சதவீத பணியாளர்கள் வருகை என்பது பொருந்தாது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிப்பவர்கள் அலுவலகங்களுக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வீட்டிலிருந்து பணி செய்பவர்கள் தொலைபேசி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை எந்த நேரமும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.

கூட்டங்களை காணொலி காட்சி மூலம் நடத்த வேண்டும். தனிப்பட்ட கூட்டங்கள், பார்வையாளர்களை சந்திப்பதை தவிர்க்கலாம். அனைத்து நேரங்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அலுவலக தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அனைத்து ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்யவேண்டும்.

பணியிடங்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும், அலுவலகங்களில், உணவகங்களில் தேவையற்ற கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News