செய்திகள்
முல்லுண்டு பகுதியில் மழையால் ஏற்பட்ட சேதத்தை கவுன்சிலர் பிரகாஷ் கங்காதரே பார்வையிட்ட காட்சி

ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களை விரைவில் வெளியேற்ற வேண்டும் - அதிகாரிகளுக்கு, உத்தவ் தாக்கரே உத்தரவு

Published On 2021-07-19 03:28 GMT   |   Update On 2021-07-19 03:28 GMT
நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மும்பை:

மும்பையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக அதிகாலை 1 மணியளவில் செம்பூர், மாகுல் பாரத்நகர் பகுதியில் உள்ள மலைக்குன்றில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த குன்றின் தடுப்புச்சுவர் இடிந்தது. இதில் தடுப்பு சுவர் அருகில் இருந்த வீடுகள் மீது மண் குவியல் விழுந்து அமுக்கியது. இதனால் நள்ளிரவில் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த மக்கள் உயிரோடு இடிபாடுகளில் புதைந்தனர். இதில் மொத்தம் 19 பேர் இறந்தனர்.

இதேபோல விக்ரோலி, சூர்யாநகர் பகுதியிலும் அதிகாலை 2.30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டு 10 பேர் இறந்தனர். இந்தநிலையில் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்த மக்களுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நிலச்சரிவு காரணமாக உயிரிழந்த ஒவ்வொருவரின் குடுபத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.

சனிக்கிழமை இரவு நகரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியதில் இருந்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.

மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள அவர் தேசிய பேரிடர் மீட்பு படை, நகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு படை மற்றும் காவல்துறை மத்தியில் ஒருங்கிணைப்பை உறுதி செய்யுமாறு அவர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தி உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை(இன்று) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னெச்சறிக்கை அளித்துள்ளதால் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் மித்தி ஆற்றங்கரை மற்றும் அருகிலுள்ள பிற இடங்களில் வசிப்பவர்களை சீக்கிரம் வெளியேற்ற முதல்-மந்திரி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

அதேபோல மழைக்காரணமாக ஜம்போ கொரோனா மையத்தில் மருத்துவ சேவை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் உத்தவ் தாக்கரே அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பா.ஜனதா கட்சி முன்னாள் எம்.பி. கிரித் சோமையா நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “மக்கள் இதுபோன்ற சம்பவங்களால் அச்சத்தில் உள்ளனர். இதுவரை 30 பேர் இறந்துள்ளனர். 23 பேர் காயம் அடைந்துள்ளனர். மாநகராட்சி மாபியா ஒப்பந்ததாரர்கள் மற்றும் சேரி மாபியாக்கள் ஏழைகளின் வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள். இது மிகவும் வருத்தமாக உள்ளது” என்றார்.

Tags:    

Similar News