செய்திகள்
உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரையில் எய்ம்ஸ் அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா?- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

Published On 2020-12-18 10:44 GMT   |   Update On 2020-12-18 10:44 GMT
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுரை:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதற்குரிய நிதியை ஒதுக்கி, உடனடியாக கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அரசின் மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் அரசுக்கு ஆர்வமில்லை, என்றே தெரியவருகிறது. மேலும் 2019-ம் ஆண்டு ஜனவரில் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை. வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு 2 மாதங்களாகியும், இதுவரை அரசிடமிருந்து முறையாக பதில் அளிக்காதது வருத்தம் அளிக்கிறது.

மதுரையில் எய்ம்ஸ் அமையும் என்று அறிவித்து விட்டு தாமதம் செய்வது ஏன்? மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிலத்தை கையகப்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பதால் மருத்துவமனை அமைவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News