செய்திகள்
ஜடேஜா

சிட்னி ஹீரோக்கள் விஹாரி, ஜடேஜா அவுட்: 4-வது டெஸ்டில் யாரை சேர்ப்பது என இந்திய அணி யோசனை

Published On 2021-01-11 13:01 GMT   |   Update On 2021-01-11 13:01 GMT
சிட்னி டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ஹனுமா விஹாரி, ஜடேஜா பிரிஸ்பேன் போட்டியில் இருந்து விலகியுள்ளதால், இந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் தோற்ற பின்னரும், இந்தியா சிறப்பாக விளையாடி போட்டியை டிரா செய்தது. ஆனால், இந்திய அணி வீரர்கள் காயம் அடைந்தது சற்று கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட் வீழ்த்திய ஜடேஜா, பேட்டிங் செய்யும்போது இடது கை பெருவிரலில் முறிவு ஏற்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் பந்து வீசவில்லை. 4-வது டெஸ்ட் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் விளையாடமாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் ஜடேஜா பிரிஸ்பேனில் நடைபெற இருக்கும் 4-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

ஹாம்ஸ்டிரிங் காயத்துடன் விளையாடி 161 பந்தில் 23 ரன்கள் அடித்த ஹனுமா விஹாரியும் காயத்தால் பிரிஸ்பேன் டெஸ்டில் இருந்து விலக இருக்கிறார். அவரது காயத்தின் தன்மை முதல் நிலையாக இருந்தாலும் குறைந்தது நான்கு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும். இதனால் பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடாதது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே இந்திய அணியில் பலம் காயம் அடைந்துள்ளனர். விஹாரிக்குப் பதில் சாஹா, மயங்க் அகர்வால், பிரித்வி ஷா ஆகியோரில் ஒருவர்தான் களம் இறங்க வேண்டும். ஒருவேளை சாஹா முழுநேர விக்கெட் கீப்பராகவும், ரிஷப் பண்ட் முழுநேர பேட்ஸ்மேனாகவும் களம் இறங்க வாய்ப்புள்ளது. இல்லை எனில் ரிஷப் பண்ட் கீப்பராகவும், மயங்க் அகர்வால் பேட்ஸ்மேனாகவும் களம் இறங்க வாய்ப்புள்ளது.



ஜடேஜாவுக்குப் பதில் ஷர்துல் தாகூர் களம் இறங்க வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய அணி நிர்வாகம் ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வதில் சற்று குழப்பமடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் என்ற நிலையில் இருக்கும்போது, ஜடேஜா அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியா 338 ரன்னில் ஆல்அவுட் ஆக முக்கிய காரணமாக இருந்தார். விஹாரி 2-வது இன்னிங்சில் அஸ்வினுடன் இணைந்து போட்டியை டிரா ஆக்கினார்.
Tags:    

Similar News