செய்திகள்
கைதான கொள்ளையன்

திருப்போரூர் அருகே 3 மாதம் தலைமறைவாக இருந்த கொள்ளையன் கைது

Published On 2019-10-18 06:58 GMT   |   Update On 2019-10-18 06:58 GMT
திருப்போரூர் அருகே 12 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் 3 மாதம் தலைமறைவாக இருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
திருப்போரூர்:

திருப்போரூரை அடுத்த கொட்டமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்ற டைல்ஸ் ரவி பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கொட்டமேட்டில் உள்ள தன்னுடைய இடத்தில் புதிதாக வீடுகட்டி வருகிறார். இதை பார்ப்பதற்காக கடந்த ஜூலை மாதம் இவருடைய மனைவி ஆனந்தி (வயது 43) மகளுடன் கொட்டமேடு வந்தார்.

அங்கு நடைபெற்று வரும் வீட்டு வேலைகளை பார்வையிட்ட பின்பு மேடவாக்கத்தைச்சேர்ந்த உறவினர் ரேவதி (42) என்பவருடன் தன்னுடைய இருசக்கரவாகனத்தில் 3 பேரும் கொட்டமேட்டிலிருந்து சிறுங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

ஆள் அரவமற்ற அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரேவதி கழுத்திலிருந்த 12 பவுன் நகையை பறித்தனர். 3 பேரும் கொள்ளையர்களுடன் போராடினர். இதில் ரேவதியின் 12 பவுன் செயின் பறிபோனது. ஆனால் கொள்ளையன் ஒருவனுடைய செல்போன் இவர்களுடைய கையில் சிக்கியது.

இதுகுறித்து திருப்போரூர் போலீசில் புகார்செய்யப்பட்டது. வழக்குபதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜா இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினார்.

செல்போன் எண்ணை வைத்து விசாரணை செய்ததில் கொள்ளையில் ஈடுபட்டது செங்கல்பட்டு அடுத்த பரனூரைச்சேர்ந்த ராஜேஷ் (வயது 28) என்பது தெரியவந்தது. இவன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

இவனை பிடிக்க போலீசார் செல்போன் டவர் மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடினர். ஆனால் போலீசார் கையில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தான்.

3 மாதங்களாக போலீசார் கையில் சிக்காமல் தப்பி வந்த ராஜேஷ் நேற்று முன்தினம் புதுப்பாக்கம் அருகே கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து கேளம்பாக்கம் காவல்நிலைய எல்லையில் வழிப்பறி செய்த 16 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
Tags:    

Similar News