செய்திகள்
குருவாலப்பர் கோவில் கிராமத்தில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை படத்தில் காணலாம்.

குருவாலப்பர் கோவில் கிராமத்தில் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Published On 2021-06-09 14:34 GMT   |   Update On 2021-06-09 14:34 GMT
குருவாலப்பர் கோவில் கிராமத்தில் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் வீரநாராயண பெருமாள் கோவில் செல்லும் சாலையின் அருகே திருச்சி- சிதம்பரம் இருவழிச்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. வீரநாராயண பெருமாள் கோவில் செல்லும் பஸ் நிறுத்தம் உள்ள இடத்தில் மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் ஒரு அடிக்கு மேலாக பள்ளம் உள்ளது.

இந்த சாலையின் வழியாகவே பஸ், கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வந்தன. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூரில் இருந்து ஏராளமான வாகன ஓட்டிகள் வந்து சென்றனர்.

தற்போது ஊரடங்கின் காரணமாக இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் சில கனரக வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன. இந்த வழியாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகி மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

இதேநிலை நீடித்தால் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் ஒரு அடிக்கு மேலாக உள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News