செய்திகள்
போலீஸ் அருங்காட்சியகமாக மாற்றப்படுவதற்கான கட்டுமான பணிகள் நடப்பதை காணலாம்.

போலீஸ் அருங்காட்சியகமாக மாறும் பழைய கமிஷனர் அலுவலகம்

Published On 2020-10-20 02:49 GMT   |   Update On 2020-10-20 02:49 GMT
சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம், ரூ.4 கோடி செலவில் போலீஸ் அருங்காட்சியகமாக மாற்றப்படுகிறது.
சென்னை:

சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் பல்வேறு வரலாற்று சிறப்பு அம்சங்களை கொண்டது. 178 ஆண்டு கால பழமை வாய்ந்த அந்த கனவு கட்டிடம் தனது புதிய அத்தியாயத்தை தொடங்கப்போகிறது. அந்த கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியும் சென்னை போலீசின் சிறப்புகளை சொல்லும். சென்னை போலீஸ் என்றாலே அந்த கட்டிடம் தான் நினைவுக்கு வரும்.

அருள், ஷெனாய், செந்தாமரை, ஸ்ரீபால், வால்டர் தேவாரம் போன்ற ஜாம்பவான் போலீஸ் கமிஷனர்கள் பணி புரிந்தது அந்த அலுவலகத்தில் தான். கடைசியாக ஜார்ஜ் கமிஷனராக இருந்தபோது தான், புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் வேப்பேரியில் திறக்கப்பட்டது. கடைசியாக அங்கு கமிஷனராக இருந்தவர் ஜார்ஜ் தான்.

போலீஸ் கமிஷனர் அலுவலகமாக மாற்றப்படும் முன்பு அந்த பகுதி வயல்வெளி சூழ்ந்த பண்ணை வீடாக இருந்தது. அருணகிரி முதலியார் என்பவர் 1842-ல் அந்த கட்டிடத்தை உருவாக்கினார். அந்த பண்ணை வீட்டை தனது விருந்தினர் இல்லமாக அருணகிரி முதலியார் வைத்திருந்தார். 1856-ல் அப்போதைய வெள்ளைக்கார போலீஸ் கமிஷனர் போல்டர்சன், பொலிவு மிகுந்த அந்த வெள்ளை மாளிகையை கமிஷனர் அலுவலகமாக மாற்றினார்.

அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு 6 மாடிகள் கொண்ட புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை அங்கு கட்டுவதற்கு, காளிமுத்து கமிஷனராக இருந்தபோது முயற்சி மேற்கொண்டார். ஆனால் பழமையான அந்த கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு கிளம்பியதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.

தற்போது பழமை மாறாமல் அந்த வெள்ளை மாளிகை கட்டிடம், ரூ.4 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு போலீஸ் அருங்காட்சியகமாக மாற்றப்படுகிறது. தமிழக போலீசின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் அரிய பொக்கிஷமாக அந்த அருங்காட்சியகத்தை அமைக்க டி.ஜி.பி. திரிபாதி ஆலோசனையின் பேரில், கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் இந்த அரிய பணியை மேற்கொண்டுள்ளனர்.

இந்த கட்டிடத்தில் உள்ள மர படிக்கட்டுகள் அப்படியே இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கூடுதல் கமிஷனர் அமல்ராஜ் கோவை போலீஸ் கமிஷனராக இருந்தபோது, அங்கு முதல் போலீஸ் அருங்காட்சியகத்தை உருவாக்கினார். தற்போது அவரது நேரடி தலைமையின் கீழ் 2-வது போலீஸ் அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் உருவாகும் என்று தெரிய வந்துள்ளது. 3 மாதங்களில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News