செய்திகள்
கைது

சிவகங்கையில் மூதாட்டி கொலையில் 2 வாலிபர்கள் கைது

Published On 2019-11-11 09:23 GMT   |   Update On 2019-11-11 09:23 GMT
சிவகங்கையில் மூதாட்டி கொலையில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி:

சிவகங்கையை அடுத்த ஒக்கூர் சின்னவீதியைச் சேர்ந்தவர் ஆதப்பன் (வயது82). இவரது மனைவி மீனாட்சி (78). இவர்களின் மகன்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் இருப்பதால் தனியாக வசித்து வருகிறார்கள்.

வீட்டில் மீனாட்சி ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். மற்றொரு அறையில் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆதப்பனை அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து ஆய்வு நடத்தினர்.

மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆதப்பனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தனது வாக்குமூலத்தில் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கை டி.புதூரைச் சேர்ந்த கணேஷ் (25), பச்சேரியைச் சேர்ந்த செல்லப்பாண்டி (24) ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள் எங்களுக்கு வீட்டு வேலை மற்றும் கடைகளுக்கு சென்று வர உதவியாக இருந்தனர். இதை நம்பி நாங்கள் அவர்களை வீட்டுக்குள் அனுமதித்தோம்.

சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு வந்த அவர்கள் திடீரென பணம் தருமாறு மிரட்டி கேட்டனர். ஆனால் பணம் தர முடியாது என கண்டிப்புடன் கூறினோம். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் மீனாட்சியை கழுத்தை நெரித்து கீழே தள்ளினர். தடுக்க வந்த என்னையும் தாக்கினர். தலையில் பலத்த காயம் அடைந்த மீனாட்சி சம்பவ இடத்திலேயே பலியானார். மயங்கி கிடந்த நான் இறந்து விட்டதாக கருதி 2 பேரும் அங்கிருந்த 5 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பி விட்டனர் என தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் 2 பேரையும் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது டி.புதூர் பகுதியில் பதுங்கி இருந்த கணேஷ், செல்லப்பாண்டி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை-பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களை நோட்டமிட்டு அவர்களை உதவுவதுபோல் நடித்து நகை-பணத்தை இவர்கள் கொள்ளையடித்து உள்ளனர். இதேபோன்று வேறு எங்கும் கைவரிசை காட்டி உள்ளனரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News