செய்திகள்
கோப்புப்படம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்

Published On 2021-10-09 04:14 GMT   |   Update On 2021-10-09 04:14 GMT
சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கல்வராயன்மலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கும், 8 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கும் இன்று தேர்தல் நடந்தது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், ரிஷிவந்தியம் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 6 -ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி 82.25 சதவீத வாக்கு பதிவானது.

இதனை தொடர்ந்து 2-ம் கட்ட வாக்குபதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதன்படி சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கல்வராயன்மலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கும், 8 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கும் தேர்தல் நடந்தது.

8 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 49 வேட்பாளர்களும், 88 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 337 வேட்பாளர்களும், 180 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 605 வேட்பாளர்களும், 1,308 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 4,019 வேட்பாளர்களும், ஆக மொத்தம் 1,584 பதவியிடங்களுக்கு 5,010 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதையொட்டி 950 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்கு செலுத்தினர். பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிற வாக்குச் சீட்டும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பச்சை நிற வாக்குச் சீட்டும், ஊராட்சி தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை மற்றும் ஊதா நிறவாக்குச் சீட்டும் பயன்படுத்தப்பட்டது.

பதட்டமான 52 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா கண்காணிப்பும், 49 வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு கண்காணிப்பும், மற்றும் 50 வாக்குச்சாவடிகளில் மத்திய அரசு அலுவலர்கள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு தேர்தல் கண்காணிக்கப்பட்டது.

இன்று நடந்த தேர்தலில் ஆண்கள் 2,44,724 பெண்கள் 2,45,270 மற்றும் 3-ம் பாலினத்தவர்கள் என 101 ஆகமொத்தம் 4,90,095 வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு செய்ய உள்ளனர்.

இன்று மாலை 6 மணிவரை வாக்கு பதிவு நடக்கிறது. நகர் பகுதியை விட கிராமபுறங்களில் வாக்குபதிவு விறுவிறுப்பாக நடந்தது.
Tags:    

Similar News