செய்திகள்
திருமாவளவன்

அரக்கோணம் இரட்டை கொலை - திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2021-04-10 08:32 GMT   |   Update On 2021-04-10 08:32 GMT
அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை:

அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கொலை சம்பவத்தை கண்டித்து கண்டன கோ‌ஷங்களை திருமாவளவன் எழுப்பினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோகனூரில் தலித் வாலிபர்கள் அர்ஜூனன், சூர்யா ஆகியோர் அ.தி.மு.க., பா.ம.க. ஜாதி வெறியர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இது ஆத்திரத்தில் நடந்த படுகொலை அல்ல. திட்டமிட்டு நடந்த கொலையாகும். தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா கூட்டணி தோல்வியை சந்திக்க இருக்கிறது. அந்த விரக்தியில் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேர்தல் நேரத்தில் பல்வேறு இடங்களில் தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

இந்த கொலை வழக்கில் 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜாதி வன்கொடுமை தாக்குதல் தொடர்ந்து நடக்கிறது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நடைமுறைப் படுத்தாததுதான் இதற்கு காரணம்.

படுகொலை செய்யப்பட்ட தலித் வாலிபர்களின் குடும்பத்தின் ஒப்புதல் இல்லாமல் பிரேத பரிசோதனை நடந்துள்ளது. இதனால் முறைப்படி குற்றப் புலனாய்வு செய்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

குற்றவாளிகளை தப்புவிக்க எல்லா வழி முறைகளையும் காவல்துறை செய்துள்ளது. விரைவில் ஆட்சி மாற்றம் வந்த பின்னர் இந்த வழக்கு சரியான பாதையில் செல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் செல்லத்துரை, ஆதவன், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News