செய்திகள்
கனிமொழி எம்.பி.

தமிழக அரசு டெங்குவை மூடி மறைக்கிறது- கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

Published On 2019-10-21 11:11 GMT   |   Update On 2019-10-21 11:11 GMT
தமிழக அரசு டெங்குவை மூடி மறைக்கிறது என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு பொதுவாகவே எதையும் ஏற்றுக் கொள்ளாமல் எந்த பிரச்சினையும் இல்லை என்று மூடி மறைக்கும் பணியை செய்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் நோய்கள் பரவும் போது இதுபோன்ற மன நிலையையும் செயல்பாட்டு வழிமுறைகளையும் முன் எடுப்பது மக்களிடையே விழிப்புணர்வு இல்லாத நிலையை உருவாக்குகிறது. மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது.

காய்ச்சல் வரக்கூடிய அபாயம் இருக்கிறது என்கிற உண்மை தெரியப்படுத்தப்பட்டால் தான் மக்களும் எச்சரிக்கையாக இருப்பார்கள். காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் போது பொதுமக்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற முடியும். பிரச்சினையை மூடி மறைப்பதின் மூலம் அது அதிகமாகுமே தவிர அதனை கட்டுப்படுத்த முடியாது.

தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன். வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து இந்த திட்டம் குறித்து வலியுறுத்துவேன். அப்படி நடைபெறவில்லை என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News