வழிபாடு
பழனி பஸ்நிலையம் அருகே மயில் காவடிகளுடன் வலம் வந்த எடப்பாடி பக்தர்களை படத்தில் காணலாம்.

பழனி முருகன் கோவிலில் காவடிகளுடன் வலம் வந்த எடப்பாடி பக்தர்கள்

Published On 2022-01-27 04:04 GMT   |   Update On 2022-01-27 04:04 GMT
எடப்பாடியில் இருந்து பால், மயில், இளநீர் உள்ளிட்ட காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்ட ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்தடைந்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஸ்ரீபருவத ராஜகுல காவடிக்குழுக்கள் சார்பில், தைப்பூச திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். அவ்வாறு வரும் பக்தர்கள், பழனி முருகன் கோவிலில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து முருகப்பெருமானுக்கு படைத்து தரிசனம் செய்வது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு எடப்பாடி பக்தர்களின் பஞ்சாமிர்த குழுவினர் பழனிக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள், பழனி அடிவார பகுதியில் 20 டன் பஞ்சாமிர்தம் தயாரித்தனர். இதற்கிடையே எடப்பாடியில் இருந்து பால், மயில், இளநீர் உள்ளிட்ட காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்ட ஏராளமான பக்தர்கள் நேற்று பழனிக்கு வந்தடைந்தனர்.

பெரியநாயகி அம்மன் கோவில் முன்பு பழனி கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் காவடிகளுக்கு தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பக்தர்கள் நான்கு ரதவீதிகளில் காவடிகளுடன் வலம் வந்து பெரியகடை வீதி, திண்டுக்கல் ரோடு, அடிவாரம் ரோடு, சன்னதிவீதி வழியாக பழனி மலைக்கோவிலை அடைந்தனர். அவர்கள் சாயரட்சை கட்டளை பூஜை, ராக்கால பூஜையிலும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது அவர்கள் தயாரித்த பஞ்சாமிர்தம் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பிரசாதமாக அவர்களுக்கு பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது. இதையடுத்து மலைக்கோவிலில் எடப்பாடி பக்தர்கள் 500 பேர் நேற்று இரவு முழுவதும் தங்கி இருந்தனர்.

பழனி மலைக்கோவிலில் இரவு தங்கும் உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பழனி மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் எடப்பாடி பக்தர்கள், பூக்களால் ‘ஓம்’ வடிவில் வரைந்த ஓவியம் அனைவரையும் கவர்ந்தது.
Tags:    

Similar News