ஆன்மிகம்
விநாயகர்

விநாயகரின் சிறப்புகள்

Published On 2020-08-22 06:30 GMT   |   Update On 2020-08-21 09:44 GMT
சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் இடையில் விநாயகர் அமர்ந்திருந்தால் அந்த வடிவத்தை, ‘கஜமுக அனுக்ரஹ வடிவம்’ என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
* விநாயகரின் யானை வடிவத் தலை, அவர் ‘ஓம்கார’ வடிவமானவர் என்பதை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

* விநாயகருக்கு நான்கு கரங்களுடன், தும்பிக்கையும் சேர்த்து ஐந்து கரங்கள் உண்டு. எனவேதான் அவர் ‘ஐங்கரன்’ என்று பெயர் பெற்றார். இந்த ஐந்து கரங்களும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கின்றன.

* விநாயகருக்கு கரும்பு, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், அவல், துவரை, அவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை, மோதகம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். விநாயகருக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய அருகம்புல் என்றால் மிகவும் விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கும் என்பது ஐதீகம்.

* சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் இடையில் முருகப்பெருமான் அமர்ந்திருக்கும் வடிவத்தை, ‘சோமாஸ்கந்தர்’ வடிவம் என்று சொல்வார்கள். அதே போல சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் இடையில் விநாயகர் அமர்ந்திருந்தால் அந்த வடிவத்தை, ‘கஜமுக அனுக்ரஹ வடிவம்’ என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

* ஒருவருக்கு கேது திசை நடக்கும்போது ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன. அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் இன்பமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து, அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

* பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும், ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு ‘கணபதி பஞ்சாயதனம்’ என்று பெயர். ஐந்து மூர்த்திகளில், விநாயகப் பெருமானை நடுவில் வைத்து வழிபட வேண்டும்.

அம்பாள், பெருமாள், சிவபெருமான் ஆகியோருக்கு முறையான சிற்ப முறைப்படி உருவங்கள் செய்து வழிபட வேண்டிய அவசியம் உண்டு. அப்படி இல்லாவிட்டால், அந்த வழிபாட்டிற்குரிய பலன் கிடைக்காது. ஆனால் பிள்ளையாருக்கு இந்த விதிமுறைகள் எதுவும் கிடையாது. சிறிதளது மஞ்சளோ அல்லது சந்தனமோ கொண்டு, சின்னக் குழந்தை ஒன்று பிடித்து வைத்தால் கூட அதில் பிள்ளையார் எழுந்தருளி அருள்புரிவார் என்பதே அவருக்கான சிறப்பு. 
Tags:    

Similar News