செய்திகள்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 181 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது திருச்சி வாரியர்ஸ்

Published On 2018-07-14 15:30 GMT   |   Update On 2018-07-14 15:30 GMT
சென்னையில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது திருச்சி வாரியர்ஸ் #NammaOoruNammaGethu #PattaiyaKelappu #CSG #TNPL2018
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 3-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் பரத் ஷங்கர், பாபா இந்த்ரஜித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பரத் ஷங்கர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 14 பந்தில் 23 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த எஸ் அரவிந்த் 1 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

3-வது விக்கெட்டுக்கு பாபா இந்த்ரஜித் உடன் சுரேஷ் குமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய சுரேஷ் குமார் 17-வது ஓவரின் 3-வது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து 37 பந்தில் அரைசதம் அடித்தார். இதில் 2 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும்.

மறுமுனையில் விளையாடிய இந்த்ரஜித் 49 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த இந்த்ரஜித் அடுத்த (53 ரன்கள்) பந்தில்  ஆட்டமிழந்தார். ரூபி திருச்சி வாரியர்ஸ் 19-வது ஓவரில் 4 சிக்சருடன் 25 ரன்கள் குவித்தது. இந்த்ரஜித் - சுரேஷ் குமார் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் குவித்தது.



கடைசி ஓவரை ஆர் விஷால் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் சுரேஷ் குமார் ஆட்டமிழந்தார். இவர் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 74 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் 20 ரன்கள் சேர்க்க ரூபி திருச்சி வாரியர்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

பின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News