செய்திகள்
மாமல்லபுரம் அருகே கடலில் கடலோர பாதுகாப்பு படை கப்பல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது

மோடி-ஜின்பிங் சந்திப்பு: மாமல்லபுரம் கடலில் பாதுகாப்புக்காக கப்பல்கள்

Published On 2019-10-10 03:13 GMT   |   Update On 2019-10-10 03:13 GMT
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்தித்து பேச உள்ளதை அடுத்து, மாமல்லபுரத்தில் பாதுகாப்புக்காக கடலோர பாதுகாப்பு படையின் கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
மாமல்லபுரம்:

சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் நாளை (வெள்ளிக்கிழமை) வருகை தருவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மர்மநபர்கள் கடல் வழியாக ஊடுருவுவதை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படையின் 2 கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல் என 3 கப்பல்கள் மாமல்லபுரம் வந்துள்ளன. இவை கடற்கரை கோவிலுக்கு கிழக்கே ஒரு கி.மீ. கடல் மைல் தொலைவில் கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன.

மேலும் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் இரு நாட்டு தலைவர்களும் ஓய்வு எடுக்கும் குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகள், சந்தித்து பேசும் அறைகள், கலைநிகழ்ச்சி நடைபெறும் மேடைகள் நவீன முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் யாரும் நுழையாத வண்ணம் கடற்கரை முழுவதும் சவுக்கு கம்புகளால் தடுப்பு அமைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே ஐந்துரதம் பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் மாமல்லபுரத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தினர். புராதன சின்னங்களை கண்டுகளிக்க தடை விதித்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் மாமல்லபுரம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. பின்னர் அபராதம் வசூலிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் மாடுகள் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில் மோடி-ஜின்பிங்கை வரவேற்கும் விதமாக தேச ஒற்றுமை பேரணி மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. ஆயிரம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணியை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் மோடி, ஜின்பிங் படம் தாங்கிய பதாகைகளையும், இரு நாட்டு கொடிகளையும் கையில் ஏந்திச்சென்றனர்.

Tags:    

Similar News