விளையாட்டு
சோயிப் அக்தர், விராட் கோலி

கேப்டன் பதவியில் இருந்து விலக கோலி கட்டாயப்படுத்தப்பட்டார்: சோயிப் அக்தர்

Published On 2022-01-24 07:26 GMT   |   Update On 2022-01-24 07:26 GMT
விராட் கோலி ஒரு சிறந்த மனிதர், சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். கிரிக்கெட் உலகில் மற்றவர்களைவிட அவர் நிறைய சாதித்துள்ளார் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக பணியாற்றினார். உலக கோப்பை போட்டிக்கு முன்பு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு முன் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து அவரை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது.

இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் யாரும் எதிர்பார்க்காத வகையில் விராட் கோலி விலகினார். அவரது 7 ஆண்டுகால கேப்டன்ஷிப் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலகுமாறு விராட் கோலி கட்டாயப் படுத்தப்பட்டார் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து தானாக விட்டு செல்லவில்லை. அவர் அவ்வாறு செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். கேப்டன்ஷிப்பை அவர் துறப்பதற்கான சரியான நேரம் இது இல்லை.

விராட் கோலி ஒரு சிறந்த மனிதர், சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். கிரிக்கெட் உலகில் மற்றவர்களைவிட அவர் நிறைய சாதித்துள்ளார். அவர் அவரது பாணியில் இயல்பாக இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும்.

விராட் கோலி எல்லா கசப்புணர்வுகளையும் மறந்துவிட்டு, அனைவரையும் மன்னித்து விட்டு முன்னேறி சென்று விளையாட வேண்டும். அவர் இரும்பால் ஆனவர் என்பதை நிரூபிக்க வேண்டிய தருணமாகும்.

இவ்வாறு சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

இதற்கிடையே டெஸ்ட் கேப்டன் பதவியில் விராட் கோலி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News