செய்திகள்
ராணுவ வீரரின் உருவப்படத்துக்கு நல்லக்கண்ணு, முத்தரசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி

காஷ்மீரில் விபத்தில் இறந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு நல்லக்கண்ணு, முத்தரசன் ஆறுதல்

Published On 2020-11-22 09:50 GMT   |   Update On 2020-11-22 09:50 GMT
காஷ்மீரில் விபத்தில் இறந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான கருப்பசாமி (வயது 34) கடந்த 19-ந்தேதி காஷ்மீர் லடாக் பகுதியில் வாகனத்தில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் இறந்தார். அவரது உடல் புதுடெல்லியில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான தெற்கு திட்டங்குளத்துக்கு கொண்டு வரப்பட்டு, ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் நிர்வாகிகள் நேற்று தெற்கு திட்டங்குளத்தில் உள்ள கருப்பசாமியின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அங்கு வீட்டின் முன்பு வைக்கப்பட்டு இருந்த கருப்பசாமியின் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் கருப்பசாமிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வீர வணக்கம் செலுத்துகிறோம். ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் உள்ள கருப்பசாமியின் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து தர வேண்டும். கருப்பசாமியின் மனைவிக்கு அரசு வேலை வழங்குவதுடன் இலவச வீடு கட்டித்தர வேண்டும். மருத்துவ கலந்தாய்வில் அரசு உள் இடஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் தேர்வான அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி செலவை ஏற்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய பின்னர், மாணவர்களின் கல்வி செலவை அரசு ஏற்பதாக கூறி உள்ளது. எனினும் நாங்கள் இதனை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட செயலாளர்கள் தூத்துக்குடி அழகுமுத்து பாண்டியன், நெல்லை காசி விசுவநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்தினருக்கு சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கர் தலைமையில் கட்சியினர் ஆறுதல் கூறினர். முன்னதாக கருப்பசாமியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேற்கு ஒன்றிய செயலாளர் ஆணி முத்துராஜ், துணைச் செயலாளர் அய்யாதுரை, கயத்தாறு தெற்கு ஒன்றிய செயலாளர் பூல்பாண்டி, மாநில செயற்குழு உறுப்பினர் பரத், மாணவரணி செயலாளர் தாயப்பன் ராஜ், இலக்கிய அணி மாரியப்பன், நகர செயலாளர் பழனி முருகன், கிளை செயலாளர் பூவரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News