செய்திகள்
ஆக்சிஜன் சிலிண்டர்

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் திணறும் ஆஸ்பத்திரிகள்

Published On 2021-05-12 10:59 GMT   |   Update On 2021-05-12 10:59 GMT
சமீபகாலமாக காய்ச்சல் என்று அனுமதிக்கப்படுபவர்களும் மூச்சு விட சிரமமாக இருப்பதாக கூறி ஆக்சிஜன் வேண்டும் என்று கேட்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாநகர் என்றால் மிகப்பெரிய ஆஸ்பத்திரிகளை கொண்டதாக உள்ளது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக ஈரோடு வருகிறார்கள்.

தற்போதைய கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஈரோட்டில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அனைத்து ஆஸ்பத்திரிகளின் படுக்கைகளும் நிரம்பி உள்ளன.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் நேற்றைய நிலவரப்படி 109 பேர் கோவிட் -19 பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் ஒரு சிலருக்கு மட்டுமே ஆக்சிஜன் தேவை என்ற கட்டாயம் இருந்தது.

ஆனால், சமீபகாலமாக காய்ச்சல் என்று அனுமதிக்கப்படுபவர்களும் மூச்சு விட சிரமமாக இருப்பதாக கூறி ஆக்சிஜன் வேண்டும் என்று கேட்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அவர்களின் சிரமம் கருதி ஆக்சிஜன் மூலம் சுவாசம் அளித்தாலும், அதை முழுமையாக பயன்படுத்தாமல் உள்ளனர்.

இதுபோன்ற நிலை தனியார் ஆஸ்பத்திரிகளிலும் உள்ளது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

பிரபலமான மருத்துவமனைகளிலேயே ஆக்சிஜன் எதிர்பாராத வகையில் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இது ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடையே பதற்றத்தையும், நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் விரைவாக ஆக்சிஜன் தயாரிக்கவும், மத்திய அரசிடம் இருந்து தேவையான ஆக்சிஜனை பெறவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோல் மருத்துவர்களின் ஆலோசனை கேட்டு தேவை என்றால் மட்டுமே ஆக்சிஜன் படுக்கைகளை நோயாளிகள் தேர்ந்து எடுக்க வேண்டும். மருந்து மாத்திரையில் குணப்படுத்தும் நிலையில் இருப்பவர்கள் ஆக்சிஜன் வேண்டும் என்று கட்டாயப்படுத்தி, உண்மையிலேயே ஆக்சிஜன் தேவையானவர்களுக்கு கிடைக்காமல் செய்துவிடக்கூடாது என்றும் மருத்துவத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News